#Jaibhim விஸ்வரூபம் பிரச்னை… துணை நின்ற சிவகுமார் குடும்பம்...நன்றி மறந்தாரா கமல்ஹாசன்...?

By manimegalai aFirst Published Nov 16, 2021, 7:49 PM IST
Highlights

ஜெய்பீம் சர்ச்சையில் இப்போது வரை வாய் திறக்காமல் இருக்கும் கலைஞானி கமல்ஹாசனுக்கு எதிராக மெல்ல, மெல்ல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஜெய்பீம் சர்ச்சையில் இப்போது வரை வாய் திறக்காமல் இருக்கும் கலைஞானி கமல்ஹாசனுக்கு எதிராக மெல்ல, மெல்ல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மற்ற மொழிகளை பொறுத்தவரை அரசியலும், சினிமாவும் சேராத தண்டவாளம் போல மக்களின் இயல்பான வாழ்க்கையில் இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவை சின்ன வட்டத்துக்குள் அடக்கி வைத்துவிட முடியாது. ஏன் என்றால் மக்கள் திலகம் எம்ஜிஆரை சினிமாவில் கதாபாத்திரங்களாக துன்புறுத்திய பிஎஸ் வீரப்பா, நம்பியாரை நிஜ வாழ்க்கையில் மக்கள் ஓட விட்டு, கரித்து கொட்டிய நிலம் தமிழகம்.

நடிகர் திலகத்தை படத்தை இன்னமும் திரையில் பார்த்த கண்ணீர் விடும் மக்கள், புரட்சி நடிகர் எஸ்எஸ்ஆரின் தமிழ் உச்சரிப்பை கண்டு ஆனந்தப்படும் ரசிகர்கள் இப்பவும் உண்டு. மக்களின் நாடி, நரம்பு என ஒட்டு மொத்த உடலின் இயக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள தமிழ் சினிமா பற்றிய பேச்சுக்கள் தான் இப்போது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

காரணம் ஜெய்பீம் என்ற படம்… இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் மாஸ் நடிப்பில் உருவான இந்த படம் கடந்த 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 1990களில் தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய் பீம் உலக சினிமா ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆனால் இந்த படம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் இல்லாத நாள் இல்லை என்று கூறிவிடமுடியும்.  படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் குருமூர்த்தி (இயற்பெயர் – தமிழ். ராணுவத்தில் இருந்தவர், வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர், அசுரன் படத்தில் அடியாட்களில் ஒருவராக வருபவர். இப்போது விக்ரம் பிரபுவை கதாநாயகனாக வைத்து டாணாக்காரன் என்ற படத்தை இயக்கி வருகிறார்) வரும் காட்சியின் பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்று உள்ளதால் பாமகவினர் போராட்டத்தில் குதித்தனர். (இந்த விவகாரத்தில் நாங்களும் வந்துவிட்டோம் என்று பாஜகவும் தனி ஆவர்த்தனம் செய்து வருவது கிளைக்கதை).

சர்ச்சைகள் வலுத்ததால் அந்த காட்சியில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கொண்ட கடிதம் எழுத அதற்கு சூர்யாவும் பதிலளித்து விட்டார்.

ஆனாலும் பட விவகாரம் முடியாமல் முற்றிக் கொண்டே இருக்கிறது. வேறு பிரச்னைகள் இல்லாததால் சாதியை மையப்படுத்தி பாமக கம்பை சுற்றி வருபவதாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் 2 வாரங்களை கடந்து மெல்ல, மெல்ல இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய முகங்கள் படைப்புகளின் மீது அரசியல் பார்வையை திணிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

தானும், தமது குடும்பமும் மட்டுமே இந்த விவகாரத்தில் நேரடியாக தாக்கப்படுவதாக (கருத்து மோதல்) நடிகர் சிவகுமாரும், மகன் நடிகர் சூர்யாவும் எண்ணுவதாக செய்திகள் வெளியான வேளையில் கலைத்துறையில் உள்ள ஆஸ்தான கலைஞர்கள் இப்போது ஜெய்பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கை கொடுக்க ஆரம்பித்து உள்ளனர்.

பா ரஞ்சித், வெற்றிமாறன், டி. ராஜேந்தர், பாரதிராஜா என முக்கிய இடத்தில் இருந்து குரல்கள் எழு… ஜெய்பீம் ஆதரவு பட்டியல் நீள ஆரம்பித்து உள்ளது. யார் ஆதரவு என்பதை இவர்கள் ஏன் இன்னமும் வாயை திறக்க, நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்க மறுக்கிறார்கள் என்று 2 பேரை நோக்கி தமிழக திரையுலகம் திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே இருக்கிறது.

முதலாமவர் நடிகர் ரஜினிகாந்த். மருத்துவ சிகிச்சை, ஓய்வு, அண்ணாத்த படம் என்று அவர் வளைய வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினியை காட்டிலும் நடிகரான கலைஞானி கமல்ஹாசன் இன்னமும் வாய் திறக்காமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் ஏன் வாய் திறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறார்கள். உச்ச நட்சத்திரமான கமல்ஹாசனுக்கு விஸ்வரூபம் படம் மூலம் பெரும் பிரச்னை எழுந்தது. நான் நாட்டை விட்டு போகிறேன் என்று அவர் ஓபனாக அறிவித்ததை தமிழகம் மறக்கவில்லை.

அப்பேர்ப்பட்ட இக்கட்டான தருணத்தில் நடிகர் சிவகுமார் தமது குடும்பத்துடன் நேரில் சென்று கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். விஸ்வரூபம் பிரச்னையில் இருந்து தனித்து விலகாமல் துணைநின்று குரல் எழுப்பினார்.

ஆனால்… இப்போது ஜெய்பீம் சர்ச்சையில் வாய்மூடி கலைஞானி கமல்ஹாசன் இருப்பது ஏன் என்ற கேள்விகள் தவிர்க்க முடியாத அளவுக்கு எழ ஆரம்பித்துள்ளன. (பதின்ம வயதில் நடிகர் கமல்ஹாசனும், நடிகர் சிவகுமாரும் சம காலத்தில் வலம் வந்தவர்கள். தமக்கான வாய்ப்புகள் சிவகுமாருக்கு போனதால் தான் நடிப்புத்துறையை விட்டு தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்தார் கமல் என்ற பேச்சு இப்பவும் கோலிவுட்டில் உண்டு).

இப்படியான தகவல்களுக்கு இடையே பல தருணங்களில் நடிகர் சிவகுமார், நடிகர் கமல்ஹாசன் இடையே புரிதல் இருந்தாலும் நடிகர் சூர்யாவை பகிரங்கமாக மிரட்டி, போஸ்டர் கிழிப்பு, ரசிகர் மன்றம் கலைப்பு, 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு என்று கிழித்து தொங்கவிடும் போது நடிகராக கமல்ஹாசன் குரல் கொடுக்க வேண்டாமா? என்ற கேள்விகள் இணையத்தை துளைத்தெடுக்க ஆரம்பித்து உள்ளன.

கமலின் மவுனத்துக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று கூறப்பட்டாலும், அவர் இப்போது முழு அரசியல்வாதியாக பரிணமளித்துள்ளார் என்பதாலும், சாதி சங்க வாக்குகளுக்காக லைசென்ட் மோடில் இருப்பதாகவும் ஒரு பேச்சு கலையுலகில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அரசியல்வாதியாக வேண்டாம்,  நடிகர் என்ற முறையில் (விஸ்வரூபம் பிரச்னையை மனதில் நினைத்து) குரல் கொடுத்திருக்க வேண்டாமா என்ற கேள்விகள் சத்தமாக எழ ஆரம்பித்து உள்ளன.

தமக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அரசியல்தலைவர்களுக்கு சக கலைஞர்களுக்கு அடுத்த நாளே டுவிட்டரில் நன்றி தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு ஜெய்பீம் Vs பாமக பிரச்னையில் நடிகர் சிவகுமார் குடும்பத்துக்கு ஆதரவாக ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட எவ்வளவு நேரம் ஆகிவிட போகிறது..? கோவை 12ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் உடனடியாக ரியாக்ட் செய்த கமல்… 2 வாரங்கள் கடந்தும் அரசியல் ரீதியாக அல்ல… கலைஞன் என்ற ரீதியிலாவது ஆதரவு தெரிவிக்க வேண்டும் அல்லவா..?

விஸ்வரூபம் பிரச்னையில் துணை நின்ற நடிகர் சிவகுமார் குடும்பத்துக்கு தார்மீக ரீதியாக ஆதரவு அளிக்க வேண்டும். நன்றியை மறந்தாரா கமல்ஹாசன்..? என்ற கேள்விகளும் ஓங்கி ஒலிக்கின்றன. வாய் திறப்பாரா கலைஞானி என்பது தான் இப்போது கோலிவுட்டில் எழும் தவிர்க்க முடியாத கேள்வி… மவுனங்கள் கலையட்டும் என்று காத்திருக்கின்றனர் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்…!!

 

விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சனை வந்தப்ப சிவகுமார் குடும்பம் உட்பட பல கலைஞர்கள் கமல் வீட்டுக்கே போயி ஆதரவு தெரிவிச்சாங்க. ஆனா இப்ப சூர்யாவை ஒரு அரசியல் கட்சி பகிரங்கமா மிரட்டும் போது கமல் கமுக்கமா இருக்காரு கவனிச்சீங்களா? சாதி ஓட்டு முக்கியம் பிகிலு! pic.twitter.com/CJikP4S82p

— பூதம் (@angry_birdu)
click me!