
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டை அரசுடமையாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுரையில் ஜி.ராமகிருஷ்ணன் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வரலாறு காணாத வறட்சியில் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. கட்த காலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது இல்லை. அதிர்ச்சி மரணம் மற்றும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவியை வழங்கவில்லை."
"விளைவிக்கப்பட்ட பயிர்கள் கருகி வாடியதால் தமிழகத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் 17 விவசாயிகள் தான் உயிரிழந்துள்ளனர் என்று உச்சீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்காக அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை மத்திய அரசு அவமதித்துவிட்டது. "
"ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டை அரசுடமையாக்க வேண்டும். கொடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டியால் அரசு நிர்வாகம் முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது" இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.