
அதிமுகவை வழிநடத்த சசிகலாவின் உறவினர் வெங்கடேஷ் துணை பொது செயலாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவிப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
ஜெயலலிதா இருந்தபோது, அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை யாரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க தயங்குவார்கள். இதனால், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பேச்சாளர்கள் யார் என்பதே பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்தது.
அவரது மறைவுக்கு பின், அதிமுகவில் உள்ள அனைவரும் பேச்சாளர்களாக காணப்படுகிறார்கள். அனைத்து அமைச்சர்களும், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்கள். இதனால், மக்களுக்கு அமைச்சர்களை அடையாளம் காணப்படுகிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை வழிநடத்த தலைமை இல்லாமல் உள்ளது. இதனால், அக்கட்சியை வழிநடத்த முடியாமல் அனைவரும் தவித்து வருகிறார்கள். முதலமைச்சர் ஏதாவது கேள்வி எழுப்பினால், தனி அணி உருவாகும் நிலை உள்ளது.
இதையொட்டி சசிகலாவின் உறவினர் ஒருவரை அதிமுகவின் புதிய துணை பொது செயலாளராக நியமிக்க, சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, குடும்பத்தினர் பலரும் நெருக்கடி கொடுத்து வருவதா கூறப்படுகிறது.
இதனால், தனது குடும்பத்தில் இருந்து ஒருவரை துணை பொது செயலராக நியமிக்க சசிகலா முடிவு செய்துள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் டிடிவி.தினகரன் கட்சியில் இணையும்போது, சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷையும் அதிமுக உறுப்பினராக சசிகலா சேர்த்து கொண்டார். மற்ற உறவினர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் உத்தரவுபடியே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
இதையொட்டி, அதிமுக துணை பொது செயலாளராக டாக்டர் வெங்கடேஷை நியமிக்க, சசிகலாவுக்கு புதிய நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு டிடிவி.தினகரனும் முழு ஆதரவு கொடுத்துள்ளார். இதனால், வெங்கடேஷுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி உள்பட அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் அதிருப்தி தெரிவிப்பதுடன், எதிர்ப்பு காட்டி வருவதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால், டாக்டர் வெங்கடேஷுக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.