
தற்போதைய சூழலில் அனைவரும் ஒன்று கூடி பேசினால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதனைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், " எடப்பாடி தலைமையிலான குழு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. அனைவரும் ஒன்று கூடி பேசினாலே பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இரு அணிகள் இணைவது கட்டாயம் நடந்தே தீரும்.
அணிகள் இணைப்பு குறித்து ஊடகங்களில் பேசினாலே பிரச்சனை ஆகிவிடுகிறது. அதனால் இது குறித்து பேட்டியளிக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் எடப்பாடி கட்டுப்பாடு விதித்துள்ளார்."
"பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வரவிட்டாலும் பரவாயில்லை என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் தான் இப்படி பேசியும் எழுதியும் வருகின்றன.
குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. காலை 6 மணி முதலே அதிகாரிகளை ஆய்வுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளோம். எடப்பாடி தலைமையிலான அரசு உரிய முறையில் இயங்கி வருகிறது." இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.