கொடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்தணும்.. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் அதிரடி!

By Asianet TamilFirst Published Aug 23, 2021, 8:57 PM IST
Highlights

கொடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் கே.விஜயன் பரபரப்பாகக் கூறியுள்ளார்.
 

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் மர்ம மரணங்கள் குறித்து வழக்கு மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அந்த விசாரணை அறிக்கை ஆகஸ்ட் 27 அன்று நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்ய உள்ளனர். அரசியல் ரீதியாகப் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த வழக்கின் நகர்வு எப்படி செல்லும் என்பது அன்று தெரிய வரும். இந்நிலையில் இந்த வழக்குப் பற்றி குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோரின் வழக்கறிஞர் கே.விஜயன் பேசியிருக்கிறார்.


அதில், “கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான் மற்றும் வாளையாறு மனோஜைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் இந்த வழக்குக்குத் தொடர்பு இல்லாதவர்கள். இவ்வழக்கில் 103 சாட்சிகள் சேர்க்கப்பட்டன. வழக்கை முடிக்க வேண்டும் என்று 41 சாட்சிகளை மட்டுமே விசாரித்தனர். அப்போதைய அதிமுக அரசு இந்த வழக்கை அவசரகதியில் முடிக்க முற்பட்டது. இந்த வழக்கின் சாட்சியான சாந்தா என்ற பெண் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மாத காலத்தில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவு பெறப்பட்டது. ஆனால், கொரோனா காலத்தில் உலகிலேயே கொடநாடு வழக்கின் விசாரணை மட்டும் நடந்தது.
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எட்பபாடி பழனிசாமி, சசிகலா, முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பா, சஜீவன் ஆகியோரை சாட்சியாக விசாரிக்க எதிர்த் தரப்பு சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். அந்த மனு தள்ளுபடியாகிவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மின்வாரிய அதிகாரி, தடயவியல் நிபுணரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இதேபோல, சாட்சிகளாகச் சேர்க்கப்பட்ட 103 பேரிடமும் விசாரணையை நடத்த வேண்டும். இந்த வழக்கில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வழக்கறிஞர் கே.விஜயன் தெரிவித்தார்.
 

click me!