கொடநாடு விவகாரம்... தூண்டில் போடும் ஸ்டாலின்... புழுவாய் சிக்கிய எடப்பாடியாரின் நண்பர்..!

By Thiraviaraj RMFirst Published Jun 25, 2021, 11:27 AM IST
Highlights

இந்த விவகாரத்துடன் கொடுநாடு எஸ்டேட் விவகாரமும், அங்கு நடந்த கொலை வழக்குகள் பற்றிய விவகாரங்களும் விசாரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியில் நண்பரும், அதிமுக மாநில வர்த்தகர் அணி அமைப்பாளருமான சஜீவனுக்கு சொந்தமான தோட்டத்தில் சட்ட விரோதமாக ரூ.2 கோடி மதிப்பிலான, 200 காட்டு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைத்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் , மனோஜ் ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் , அதிமுக மாநில வர்த்தகர் அணி அமைப்பாளருமான சஜீவன். இவரது பட்டா நிலத்தில் கடந்த அதிமுக ஆட்சியில், விவசாய பயிரான, சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ( SCHEDULE-1)எனப்படும் பாதுகாக்கப்பட்ட மரங்களான ஈட்டி, தேக்கு, சந்தனம் பலா போன்ற விலை உயர்ந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கேரளா மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் கடத்திச் சென்று பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் நடுவட்டம் வனச்சரகராக இருந்த - சிவா, உதவி வனச்சரகர்- குமார், வனவர் - தர்மசக்தி, வனக்காவலர் - நசீஸ்குட்டன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் சட்டவிரோதமாக கடந்த அதிமுக ஆட்சியில் வனத்துறை அதிகாரிகளை மிரட்டி, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த ஈட்டி, தேக்கு, சந்தனம், பலா உட்பட 200 மரங்களை வெட்டி கடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக காட்டு மரங்களை வெட்டிய விவகாரத்தில் சிக்கியுள்ள அதிமுக மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவன் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கேரளா மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் 200 காட்டு மரங்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடங்களில் வனத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்துடன் கொடுநாடு எஸ்டேட் விவகாரமும், அங்கு நடந்த கொலை வழக்குகள் பற்றிய விவகாரங்களும் விசாரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆக, அதிமுக ஆட்சியில் நடந்த பல விவகாரங்களை கொக்கி போட்டு துருவ ஆரம்பித்து விட்டது திமுக ஆட்சி எனக் கூறப்படுகிறது.

click me!