திருச்சி மேயராக தனது மகனை எப்படியாவது ஆக்கிவிட வேண்டும் என்று கடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
திமுக முன்னாள் தலைவர் கலைஞர்,தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் நெருக்கமானவர் கே.என்.நேரு. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திமுகவினரைப் பொறுத்தவரை நேரு தான் எப்போதும் மினிஸ்டர். அவரை அழைப்பது என்றால் முன்னொட்டாக மினிஸ்டர் என்ற வார்த்தை எப்போதும் சேர்ந்து கொள்ளும்.திருச்சி மாவட்டத்தின் முகமாக இருப்பவர் கே.என்.நேரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வளர்ச்சி, ஒருகட்டத்தில் திருச்சி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் திருச்சி மாவட்ட திமுக பொறுப்பை இரண்டாக பிரித்து, அப்போதைக்கு பிரச்னையை முடித்து வைத்தனர் திமுக தலைமை.
அப்போது இருந்து இப்போது வரை, மேலாக பார்க்கும் போது பிரச்சனை இல்லாத மாதிரி இருந்தாலும், கே.என்.நேரு - அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் இடையே எப்போதும் அந்த முணுமுணுப்புகள் இருந்துதான் வருகிறது. தனது மகன் அருணை மேயர் ஆகிவிட்டால், திருச்சி நிரந்தரமாக நம்முடைய கோட்டை ஆகிவிடும் என்று கணக்கு போடுகிறார் அமைச்சர் கே.என்.நேரு.
கடந்த வாரம் நடைபெற்ற கே.என்.நேருவின் மகன் அருணின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ப்ளெக்ஸ்,பேனர்,போஸ்டர்கள் என திருச்சி மாநகரமே கொண்டாட்ட மயமானது. அதுவும் 5,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கி ‘மாஸ்’ காட்டினர் அருணின் ஆதரவாளர்கள்.வாள் கொடுத்து,கேக் வெட்டி, வந்தவர்களை எல்லாம் சிறப்பாக கவனித்து உள்ளனர்.இதுவெல்லாம் மேயர் தேர்தலின் வெற்றிக்கு சேம்பிள் என்கின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சியின் மேயர் வேட்பாளராக அருண் நேருவை அறிவிக்க வலியுறுத்தி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினும் கருணாநிதி பாணியில் திருச்சி மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்களை கொடுத்திருக்கிறார். கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இரண்டு அமைச்சர்களுமே ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் தான்.ஒருபக்கம் அன்பில் மகேஷ் மேயர் வாய்ப்பு எங்களுக்கு தர வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்.எப்படியும் கே.என்.நேருவுக்கு டிக் அடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர். மொத்தத்தில் திருச்சி மாவட்ட அரசியல் ‘மீண்டும்’ சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.