DMK: திமுகவில் களமிறங்கும் அடுத்த வாரிசு… டிசம்பர் 12ம் தேதிக்காக காத்திருக்கும் உடன்பிறப்புகள்

By manimegalai aFirst Published Dec 7, 2021, 9:02 AM IST
Highlights

திமுகவில் இருக்கும் வாரிசு அரசியல் போதாது என்று அமைச்சர் கே. என். நேரு தமது மகனை அரசியல் களத்தில் கால் பதிக்க வைக்க போகிறார் என்ற பேச்சு மலைக்கோட்டை நகரம் முழுவதும் பேச்சாக இருக்கிறது.

சென்னை:  திமுகவில் இருக்கும் வாரிசு அரசியல் போதாது என்று அமைச்சர் கே. என். நேரு தமது மகனை அரசியல் களத்தில் கால் பதிக்க வைக்க போகிறார் என்ற பேச்சு மலைக்கோட்டை நகரம் முழுவதும் பேச்சாக இருக்கிறது.

திமுகவில் எப்போது பேசப்படும் அல்லது குற்றச்சாட்டாய் முன் வைக்கப்படும் ஒரு விஷயம் வாரிசு அரசியல். திமுகவில் ஏதேனும் ஒரு முக்கிய பதவியில் உட்கார்ந்துவிட்டால் போதும்… அப்படியே காலத்துக்கும் வலம் வரலாம் என்று எதிர்க்கட்சிகள் இன்னமும் போட்டு தாக்கி வருகின்றனர்.

அதிலும் திமுகவின் தலைமையை நோக்கிய வாரிசு அரசியலை எதிர்க்கட்சிகள் போட்டு தாளித்து வருகின்றன. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்றும் இப்போது கிருத்திகா உதயநிதி வரை வாரிசு அரசியல் விவகாரம் பேசப்படுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் புகார் பட்டியல் வாசித்து வருகின்றன.

திமுக தலைமை மட்டுமல்ல… அதன் அடுத்த இடத்தில் இருக்கும் முக்கிய தலைவர்களே வாரிசுகளை களமிறக்கி வருவதும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக அமைச்சர் கே.என். நேரு தமது மகன் அருண் நேருவை களம் இறக்குகிறார் என்ற பேச்சுகள் மலைக்கோட்டை நகரம் முழுக்க எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.

திமுகவுக்கு எப்படி சென்னை பலம் வாய்ந்த கோட்டையோ அதே போல தான் திருச்சியும். கட்சியின் முக்கியமான மாநாடுகள், அரசியல் காய் நகர்த்தல்கள் எல்லாம் திருச்சியில் முன் எடுக்கப்பட்டு இருக்கின்றன. திருச்சிக்கு இப்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கேஎன் நேரு என்ற இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர்.

இவர்களின் போட்டா போட்டி அரசியல் உடன்பிறப்புகளை அதிரி புதிரியாக்கி இருக்கிறது. திருச்சியின் இரு பெரும் தலைகளின் கோஷ்டி அரசியல் மலைக்கோட்டை மாவட்டத்தை உஷ்ணமாக்கி வருகிறது. மூத்த தலைவர், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் கே.என். நேரு.

ஸ்டாலினுக்கு எந்தளவுக்கு நெருக்கமோ அதே போன்று இப்போது அடுத்த தலைமுறை அரசியல்வாதியான உதயநிதிக்கு நெருக்கமானவராக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருச்சியில் இப்போது அன்பில் ஆதிக்கம் அதிகம் என்றே கூறப்படுகிறது.

கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே அன்பில், கேஎன் நேருவின் கோஷ்டி அரசியலால் திருச்சி திமுக திக்குமுக்காடி கொண்டிருப்பதாக பேச்சுகள் ஓடி கொண்டு இருக்கிறது. போன மாதம் கேஎன் நேருவின் பிறந்த நாளால் திருச்சி வண்ணமயமாகவும், போஸ்டர்கள் மயமாகவும் மாறி போனது. வழக்கமாக மீசையை முறுக்கி கொண்டு மலைக்கோட்டையின் மாமனிதனே…. திருச்சி கோட்டையின் மன்னனே என்று வாசகங்களுடன் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தாலும் அதில் நேரு மகன் அருண் நேருவின் போட்டோக்களும் இடம்பெற்றிருந்ததை சுட்டிக்காட்டுகின்றனர் அன்பில் ஆதரவாளர்கள்.

தமது வாரிசை களம் இறக்கும் நடவடிக்கைகளில் கே.என். நேரு இறங்கிவிட்டார் என்று புகார் பத்திரம் வாசிக்கின்றனர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள். மழை, வெள்ள பாதிப்புகளை பற்றி பார்வையிட திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலினை மகனுடன் கே.என். நேரு சந்தித்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

அதில் அதிருப்தி முகமாய் வலம் வந்த அன்பில் ஆதரவாளர்கள் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் திருச்சியை போஸ்டர்களினாலும், பேனர்களினாலும் அதகளப்படுத்தி இருந்தனர். விதிகள் மீறப்பட்டதால் அவற்றை அகற்ற அன்பில் உத்தரவு போட்டது தனிக்கதை.

அதற்கு இப்போது பதிலடியாக கேஎன் நேரு ஆதரவாளர்கள் வரும் 12ம் தேதிக்காக காத்திருக்கின்றனர். அன்றைய தினம் அருண் நேருவின் பிறந்த நாள். அதே சமயம் அன்பில் ஆதரவாளர்களும் என்ன நடக்க போகிறது என்பது குறித்து ஆவல் கொண்டு இருக்கின்றனர்.

click me!