முல்லை பெரியார் அணை விவகாரம்… மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வரவேற்கும் கேரள எம்.பி.!!

By Narendran SFirst Published Oct 30, 2021, 4:57 PM IST
Highlights

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் நம்பிக்கை தருவதாக கேரள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் நம்பிக்கை தருவதாக கேரள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. மேலும் முல்லைப் பெரியார் அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இரு மாநில முதலமைச்சர்களும் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் கேரள முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, தமிழக அரசும், மக்களும் கவலை கொண்டு உள்ளனர். கடினமான இந்தக் கால கட்டத்தில், தமிழகம் கேரளவுக்கு  உறுதுணையாக இருக்கும். முல்லைப் பெரியாறு அணை அணையின் நீர்மட்டத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். தமிழக அதிகாரிகள், கேரள மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

கேரள மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் இருந்து வெள்ள நிவாரணப் பொருட்களை தடையின்றி விநியோகம் செய்யுமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் நம்பிக்கை தருவதாக கேரள முன்னாள்  நீர் பாசன அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், தமிழகம் மற்றும் கேரளா அரசு முல்லை பெரியார் அணை விவகாரம் குறித்து பேசி அரசியல் ரீதியான உடன்பாட்டை எட்ட வேண்டும்.  அதற்கு முல்லைபெரியாறில் புதிய அணை கட்டுவதே தீர்வாக இருக்கும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் வரவேற்கத்தக்கது. அவர் எழுதிய கடிதம் நம்பிக்கை தருகிறது.  126 ஆண்டு பழைமையான அணைக்கு பதில் புதிய அணையை கட்டி தற்போதைய தேவைக்கு ஏற்ப புதிய ஒப்பந்தத்தை போட வேண்டும். கேரளா அரசு மற்றும் அனைத்து கட்சிகளின் கோரிக்கையும் இதுதான். புதிய ஒப்பந்தத்தால் தமிழகத்திற்கு வரும் நீர் கிடைக்காதோ என்பதால் தான் தமிழக அரசு புதிய அணைக்கு அனுமதி மறுத்து வருகிறது.

ஆனால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் நீர் எக்காரணம் கொண்டும் தடைபடாது. முல்லைபெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் லட்சக் கணக்கான மக்களை மத்திய அரசும், தமிழக அரசும் கருத்தில் கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்தால் பெய்யும் மழை அளவு அதிகரித்து வெள்ளம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்டு வருகிறது. அதற்கான தீர்வை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2018 ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறில் ஏற்பட்ட வெள்ளத்திற்காக தமிழகத்தை குறை கூற முடியாது. அணை நிறைந்து வெள்ள நீர் வெளியேறும் போது நான்கு மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள சட்டசபையில் முதல்வர் கூறியது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்தார். 

click me!