
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாநில முதல் அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பிரனாயி விஜயன் கூறியுள்ளார்.
வலுக்கும் எதிர்ப்பு
விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ள மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இறைச்சிகாக 90 சதவீத மாடுகள் சந்தையில் இருந்து பெறப்படுவதால் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கிடையே மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது என்கிற தகவல்கள் வெளியாகின. இவை, மத்திய அரசின் மீதுள்ள எதிர்ப்புக்கு மேலும் வலு சேர்த்தன.
முன்னணியில் கேரளா
மத்திய அரசின் விதிமுறைகளை தங்கள் மாநிலத்தில் பின்பற்ற முடியாது என்று கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மற்றும் திரிபுரா மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் அதிரடியாக அறிவி்த்தனர். மாட்டிறைச்சி விவகாரத்தில் மற்ற மாநிலங்களை விடவும் கேரள முன்னணியில் இருந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் இளைஞர், மாணவர் அமைப்பினர் மாட்டிறைச்சி திருவிழாவை நடத்தி முடித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மற்ற மாநில முதல் அமைச்சர்களுக்கு கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை எழுதினார்.
கூட்டாட்சி்க்கு எதிரானது
அதில், மாநில உரிமைகளை பறிக்கும் விதத்திலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்கள் தங்களுக்கு விருப்பமான உணவை தேர்வு செய்யும் உணவு உரிமையிலும் மத்திய அரசு தேவையில்லாமல் தலையிட்டுள்ளது.
இதனால் கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும். இப்போது மத்திய அரசின் நடவடிக்கை எதிர்க்காவிட்டால் எதிர்காலத்தில் இன்னும் பல ஜனநாயக விரோத நடவடிக்கைகள் நம்மீது திணிக்கப்படும். என மத்திய அரசின் கட்டுப்பாடுகளை எதிர்க்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
சிறப்பு சட்டசபை கூட்டம்
இந்த நிலையில், மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு அனைத்து மாநில முதல் அமைச்சர்கள் மாநாடு நடத்தப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில், இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு அனைத்து மாநில முதல் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். மற்ற மாநில முதல் அமைச்சர்களுடன் பேசிய பின்னர் கூட்டம் தொடர்பான தேதி இறுதி செய்யப்படும். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிப்பதற்காக சிறப்பு கூட்டத்தை கூட்டவுள்ளோம்.
எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலாவிடம் பேசிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதன்பின்னர்தான் கேரள உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.