
சிறைச்சாலைகள் சிந்தனையை வளர்க்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அவ்வாறு சிறையில் இருக்கும் அனுபவம், சசிகலாவுக்கு இரண்டு சிந்தனைகளை தந்துள்ளது.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்பது ஒரு சிந்தனை. தம் குடும்பமே தமக்கு உதவி என்பது இரண்டாவது சிந்தனை.
அதன்படி, சாட்சிக்காரர்களை தவிர்த்துவிட்டு, சண்டைக்காரரான டெல்லி மேலிடத்தில் ஒரு சமரச உடன்படிக்கை செய்து கொள்ள சசிகலா தயாராகி விட்டதாகவே கூறப்படுகிறது.
அதன்படி, டெல்லி மேலிடம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள, தமது தூதுவர்கள் மூலமாக அவர் சம்மதம் தெரிவித்த தகவல் சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று சேர்ந்து விட்டது.
எனவே, விரைவில் சசிகலா தரப்பினருக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, தம் குடும்பமே தமக்கு உதவி என்ற சிந்தனையை வென்றெடுக்க ஒரு வேண்டுகோளும் மேலிடத்திற்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சொந்த ஜாதிக்காரர் என்று, எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகளை எல்லாம் வழங்கி, ஒரு கட்டத்தில் பொறுப்பு முதல்வராகவும் வைத்து அழகு பார்த்த பன்னீர் முதுகில் குத்தி விட்டார்.
அடுத்து, நம்பிக்கைக்குரியவராக தொடர்ந்து வலம் வந்த எடப்பாடியை முதல்வர் ஆக்கினார், அவர் தமது பதவியை காப்பாற்றிக் கொள்ள, எதிரிகளோடு நட்பு வைத்துக் கொண்டு, துரோகம் இழைக்க துடிக்கிறார்.
அதனால், தம் குடும்பத்தை சேர்ந்த திவாகரனை கட்சியின் உயர்ந்த பதவிக்கு கொண்டு வருவதுதான் சிறந்த வழி என்று சசிகலா முடிவெடுத்து விட்டார்.
உறவுகளுக்குள் நடந்த அதிகார போட்டியும், யார் பெரியவர் என்று நடந்த நீயா? நானா? யுத்தமும்தான் இந்த அளவுக்கு, நம்மை அரசியலில் ஓரம் கட்ட காரணமாக இருந்தது.
அதனால், தம்மை சந்தித்த முக்கிய பிரமுகர்களிடம் எல்லாம் சொல்லி, குடும்ப உறவுகளில் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் அவர்.
அதை தொடர்ந்து, எதிரிக்கு, எதிரி நண்பன் என்ற பார்முலாவை பயன்படுத்தி, அதிமுகவில் பன்னீர் மற்றும் எடப்பாடிக்கு எதிரான அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரையும், தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.
அதன் விளைவாகவே, எம்.எல்.ஏ க்கள், பேச்சாளர்கள் என பலரும் எடப்பாடி மற்றும் பன்னீரை செய்தியாளர்கள் சந்திப்பிலும், பொது கூட்டத்திலும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும், கூவத்தூரில் அளிக்கப்பட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், சசிகலா தரப்பில் இருந்து எம்.எல்.ஏ க்களுக்கு உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
அதனால், கட்சி மற்றும் ஆட்சியில் சசிகலா கையே மீண்டும் ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், எடப்பாடி மற்றும் பன்னீர் அணியை கையில் வைத்திருக்கும், டெல்லி மேலிடத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்பது தெரியவில்லை என்கின்றனர் அதிமுகவினர்.