கலகலக்கும் கரூர் மாவட்ட திமுக..! ஜோதி மணியால் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒன்று சேரும் நிர்வாகிகள்..!

By Selva KathirFirst Published Jun 17, 2020, 10:18 AM IST
Highlights

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியே வந்த சில நாட்களில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர், எம்எல்ஏ என உச்சத்திற்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு, காங்கிரஸ் எம்பி ஜோதி மணியால் போதாத காலம் வந்துள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியே வந்த சில நாட்களில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர், எம்எல்ஏ என உச்சத்திற்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு, காங்கிரஸ் எம்பி ஜோதி மணியால் போதாத காலம் வந்துள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் எந்த மாவட்டதிலும் இல்லாத வகையில் கரூரில் தான் கூட்டணி கட்சியான காங்கிரசின் எம்பியை கூடவே சேர்த்துக் கொண்டு நம் மாவட்டச் செயலாளர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது தான் கரூர் திமுகவினரின் ஒரே கவலை. ஒரு காலத்தில் செந்தில் பாலாஜியை மணல் கடத்தல் மாஃபியா என்று விமர்சித்தவர் ஜோதிமணி. ஆனால் செந்தில் பாலாஜி திமுகவிற்கு வந்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட போது ஜோதிமணி கரூர் தொகுதி எம்பி பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

அப்போது முதல் செந்தில் பாலாஜி  - ஜோதி மணி இடையே நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு பிரச்சாரத்திற்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கூட கரூரில் நடைபெற்ற போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், நிகழ்ச்சிகள் என அனைத்திலும் இருவரையும் சேர்த்தே பார்க்க முடிந்தது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசியல் செய்ய வலுவான தலைவர் கிடையாது. இதனால் அவரை அங்கு தட்டிக்கேட்கவோ, சுட்டிக்காட்டவோ யாரும் இல்லை. இதனால் திமுக நிர்வாகிகளை விட ஜோதிமணியைத்தான் அவரும் போராட்டங்களில் முன்னிலைப்படுத்தினார்.

அப்போதே திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் பலர் இது குறித்து முனுமுனுக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இந்த விவகாரத்தை திமுக தலைமையிடம் கொண்டு சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் திமுக படு தோல்வியை தழுவியது. கரூருக்கு அருகாமை மாவட்டங்களில் எல்லாம் திமுக ஸ்கோர் செய்த நிலையில் கரூரில் மட்டும் மண்ணை கவ்வியது. இதனால் செந்தில் பாலாஜி மீது திமுக தலைமைக்கு அதிருப்தி உருவாகத் தொடங்கியது. நீண்ட நாட்களாக செந்தில் பாலாஜியை ஸ்டாலின் சந்திக்காமல் தவிர்த்து வந்தார் என்று கூட கூறப்பட்டது.

இதன் பிறகு அமமுகவில் இருந்து சில முக்கிய தலைகளை தட்டிக் கொண்டு வந்த மறுபடியும் ஸ்டாலினிடம் நெருங்கினார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்றது. அப்போது திமுகவினரை ஓரம்கட்டிவிட்டு அமமுகவில் தன்னுடன் வந்தவர்களுக்கு செந்தில் பாலாஜி முக்கியத்துவம் கொடுத்தார். மேலும் கட்சி நிகழ்ச்சிகளில் ஜோதிமணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை திமுகவினர் சீரியசாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர். மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ச்சியாக கட்சி மேலிடத்திற்கு புகார்கள் சென்றன. ஆனால் அதனை கட்சி கண்டுகொள்ளவில்லை.

இதனால் திமுகவினர் பலர் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைய ஆரம்பித்தனர். இப்போது விழித்துக் கொண்ட திமுக தலைமை, பிரச்சனையை என்ன என்று தலைமை நிலையச் செயலாளர் கே.என்.நேருவை வைத்து விசாரிக்க ஆரம்பித்தது. நேரு, கரூர் மாவட்ட திமுகவினரை வரவழைத்து பஞ்சாயத்து பேசினார். ஆனால் அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக செந்தில் பாலாஜியை மாற்ற வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றனர். இதனால்பஞ்சாயத்து எடுபடாமல் போகவே அவர்கள் அதிமுகவில் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர்.

கட்சியை விட்டு செல்லும் அனைவருமே திமுகவில் எங்களுக்கு மரியாதை இல்லை, காங்கிரஸ் எம்பிக்கு தான்  மரியாதை உள்ளது. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத கொடுமையாக கரூரில் தான் கூட்டணி கட்சி எம்பியை முன்னிலைப்படுத்தி மாவட்டச் செயலாளர் நிகழ்ச்சி, போராட்டங்கள் நடத்துகிறார் என்று கூறிச் சென்று வருகின்றனர். இதனால் செந்தில் பாலாஜிக்கு சீக்கிரம் கடிவாளம் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!