மீண்டும் எடப்பாடியின் குட் புக்கில் ராஜேந்திர பாலாஜி..! பீதியில் விருதுநகர் மாவட்ட அதிமுக..!

By Selva KathirFirst Published Jun 17, 2020, 10:10 AM IST
Highlights

யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குட் புக்கில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடம் பெற்று இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குட் புக்கில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடம் பெற்று இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் மோடிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் கூட கூறத் தயங்கும் கருத்துகளை மிகவும் துணிச்சலாக கூறி வந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஒரு கட்டத்தில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா கருத்துகளை மிகவும் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார் அவர். அதே சமயம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் சில கருத்துகளை ராஜேந்திர பாலாஜி பேச அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. அதோடு மட்டும் அல்லாமல் தொடர்ச்சியாக ரஜினியை ஆதரித்து ராஜேந்திர பாலாஜி பேசியது எடப்பாடி பழனிசாமியை எரிச்சல் அடைய வைத்தது.

பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறியும் ராஜேந்திர பாலாஜி தனது பேச்சு வழக்கை மாற்றவில்லை. தொடர்ந்து பாஜக, ரஜினிக்கு ஆதரவாக அவர் பேசி வந்த காரணத்தினால் அவர் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் சேர்ந்துவிடுவார் என்றும் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் தான் ரஜினி குறித்து யாரும் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை கட்டளை இட்டது. ஆனால் அதனை மீறி ரஜினிக்கு ஆதரவாக ராஜேந்திர பாலாஜி பேசினார். மேலும் சிறுபான்மை மக்களை காயப்படுத்தும் வகையிலும் அவர் சில கருத்துகளை மறைமுகமாக தெரிவித்தார்.

இதனால் டென்சன் ஆன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இணைந்து ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து கட்சிப்பதவியை பறித்தனர். அதாவது விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து கட்சி மேலிடம் பறித்தது. இதன் பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார். கட்சி நிகழ்ச்சிகளில் கூட பெரிய அளவில் கலந்து கொள்வது இல்லை. அதற்கு முன்பு வரை வாரம் ஒரு நாள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தீனி போடுவது அவர் வழக்கம். ஆனால் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோன பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எங்கும் பார்க்க முடியவில்லை.

இதற்கு இடையே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து அமைச்சர் பதவியும் பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஒரு காலத்தில் அமைச்சரின் நிழலாக இருந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி மாவட்டச் செயலாளர் பதவியை பெற சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் காய் நகர்த்தினார். அவருக்கு தற்போது அதிகாரம் மிக்க அமைச்சர் ஒருவரிடம் இருந்து ஆதரவு கிடைத்ததாகவும் கூறப்பட்டது. இதனால் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று உறுதியாக நம்பப்பட்டது.

ஒரு கட்டத்தில் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஒதுக்க ஆரம்பித்தனர். அவர் இல்லாமல் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசு விழாக்களில் எம்எல்ஏக்களுக்கு கிடைத்த மரியாதை கூட அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறையில் இருந்து நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இந்த துறை முதலமைச்சரின் நேரடி அறிக்கைகள், செய்திக்குறிப்புகளை மட்டுமே வெளியிடக்கூடியது.

அப்படி இருக்கையில் முதலமைச்சரால் ஓரம் கட்டப்பட்ட ராஜேந்திர பாலாஜியின் அறிக்கை டிஐபிஆர் எனப்படும் தமிழக அரசின் துறையில் இருந்து வெளியிடப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் முதலமைச்சரின் குட் புக்கில் இல்லாத ஒருவரது அறிக்கை கண்டிப்பாக டிஐபிஆர் மூலமாக வெளியாக வாய்ப்பு இல்லை. இதனால் முதலமைச்சர் எடப்பாடியிடம் இழந்த செல்வாக்கை ராஜேந்திர பாலாஜி மீண்டும் பெற்றுவிட்டதாக பேச்சுகள் அடிபட்டன. கட்சியில் இருந்து ராஜேந்திர பாலாஜி ஓரம் கட்டப்படுவார் என நினைத்து அவரை ஒதுக்கிய விருதுநகர் மாவட்ட அதிமுக தற்போது வௌ வௌத்துப் போயுள்ளது.

இதனிடையே திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அழைத்து அறிக்கை வெளியிட கூறியதன் பின்னணி வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வரை ஸ்டாலினுக்க எதிராக ஒரு சில அமைச்சர்கள் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டன. ஆனால் அந்த அறிக்கைகள் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. எனவே செய்தியாளர்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளின் செல்லப் பிள்ளையான ராஜேந்திர பாலாஜியை பயன்படுத்தி ஸ்டாலினுக்கு எதிராக சூடான அறிக்கையை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர். இதன் மூலம் விரைவில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜேந்திர பாலாஜி மீண்டும் பெறுவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

click me!