
கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். சில நாட்கள் கழித்து, சசிகலா பொது செயலாளராக பொறுப்பேற்றார்.
பின்னர், கடந்த 5ம் தேதி ஒ.பி.எஸ். தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், உடன்பாடு ஏற்படாத ஓ.பி.எஸ். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இதனால் அதிமுகவில் சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்தது. ஆரம்பத்தில் தனியாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த நிர்வாகிகளின் ஆதரவு பெருகி வருகிறது.. இதனால், அதிமுகவில் உச்சக்கட்ட குழப்ப போராட்டம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவில் எவ்வித பொறுப்பும் இல்லாமல் பலர் அதிருப்தியில் இருந்தனர். இதை அறிந்த சசிகலா, அதிருப்தியாளர்களாக காணப்ப்பட்ட சைதை துரைசாமி, கருப்பசாமி பாண்டியன் உள்பட சிலரை அமைப்பு செயலாளராக நியமித்தார். அதன்பின், கட்டமைப்பு சீரான பின்னர், அவர் பொது செயலாளராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு உச்சநீதிமன்றம் நேற்று 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதில், ஜெயலலிதா மரணம் அடைந்ததால், 3 பேருக்கு சிறை தண்டனை உறுதியானது. இதைதொடர்ந்து சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ராஹாரம் சிறைக்கு புறப்பட்டுள்ளார்.
மேலும், சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், கட்சியை வழி நடத்துவதற்கு டி.டி.கே.தினகரனை துணை பொது செயலாளராக இன்று காலை அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரான கருப்புசாமி பாண்டியன், தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து படிபடியாக பல பதவிகளை பெற்றவர் கருப்பசாமி.
அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்த கருப்பசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்து எம்எல்ஏவாக இருந்தார். பின்னர், கடந்த ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில், மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
தற்போது, அவர் திடீரென தனது அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதற்கு, பின்னணி காரணமும் உண்டு என அதிமுகவினர் சிலர் கூறுகின்றனர்.
கருப்பசாமி பாண்டியனுக்கு நேரடியாக எதிரியாக இருப்பவர் நயினார் நகேந்திரன். இவர் டி.டி.வி.தினகரனுக்கு சிஷ்யனாக இருப்பதால், அவருக்கே கட்சியிலும், அரசியலிலும் எதிர்க்காலம் இருக்கும். தனக்கு எந்த பலனும் இல்லை என கருதிய கருப்பசாமி பாண்டியன், ராஜினாமா செய்தார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே 4 அமைப்பு செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். இந்த வேளையில் கருப்பசாமி பாண்டியன், தனது அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.