‘அதிமுகவை தோற்கடிப்பதே முதல் வேலை’... திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த முக்குலத்தோர் புலிப்படை... கருணாஸ் அதிரடி!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 8, 2021, 12:17 PM IST
Highlights

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. 

​தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியன குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுக தயக்கம் காட்டுவதால் அக்கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்திருந்தார். 

அதிமுக என்ற இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் ஒரு தாய் மக்களாக பாவித்த இயக்கம். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அந்த இயக்கத்தை வன்னியர்கள், கொங்கு கவுண்டர்கள் சமுதாயத்திற்குமான அமைப்பாக மாற்றி கட்டமைத்துவிட்டார். இது வளர்ச்சிககான பாதை அல்ல, அழிவை நோக்கிய பாதை. நாங்கள் இல்லாமல் அதிமுகவால் அரசு அமைக்க முடியாது. எங்களுடைய இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததால் அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அறிவித்தார். 


மேலும் முக்குலத்தோர் அதிகம் உள்ள 84 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்திருந்தார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் இளைஞர் அணி செயலாளர் அஜய் வாண்டையார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களிடம் தங்களது ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!