
2ஜி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆ.ராசாவும் கனிமொழியும் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடந்த 7 ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், போதிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பால், காங்கிரஸ் மற்றும் திமுக மீதான ஊழல் கறைகள் துடைக்கப்பட்டு தாங்கள் சுத்தமானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக காங்கிரஸாரும் திமுகவினரும் கொண்டாடிவருகின்றனர்.
இந்ந்லையில், நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுதலை பெற்ற ஆ.ராசாவும் கனிமொழியும் டெல்லியிலிருந்து இன்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் நேரில் சென்று அவர்களை அழைத்து சென்றனர்.
விமான நிலையத்திலிருந்து நேராக கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற கனிமொழியும் ராசாவும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடமும் இருவரும் வாழ்த்து பெற்றனர்.