
இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்ற வேண்டிய சூழலில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பிறந்தநாள் விழா, சென்னை வேலப்பன் சாவடியில் நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், இந்தியாவின் பன்முகத்தன்மையே ஆபத்தில் உள்ளது. நமது குறிக்கோள் என்பது பதவியை அடைவதோ ஆட்சி அமைப்பதோ என்பதைவிட இழந்துவரும் இந்தியாவின் பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதே. இதைப்பற்றி வீரமணி, நல்லக்கண்ணு, வைகோ ஆகியோரை விட நான் வலியுறுத்தி கூறமுடியாது.
பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள் என பன்முகத்தன்மையை கொண்டிருப்பதுதான் இந்தியாவின் சிறப்பு. ஆனால் தற்போது, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவுப்பழக்கம் ஒரே உடைப்பழக்கம் என ஒற்றை கலாச்சாரத்தை நோக்கிய பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்குத்தான் அரசியல் சாசனத்தை அமைத்து இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பை அரசியல் கட்சிகளிடம் நமது முன்னோர்கள் கொடுத்தனர். அதற்கேற்ப இந்தியாவின் மூத்த கட்சியான காங்கிரஸ் கட்சி அந்த பணியை செவ்வனே செய்தது. திராவிட கட்சிகளும் தங்களால் இயன்ற பணிகளை ஆற்றி, இந்தியாவின் மையக்கருத்தான பன்முகத்தன்மையை காத்தனர். ஆனால், இன்று இந்தியாவின் பன்முகத்தன்மைக்கே சவால் விடுக்கப்பட்டுகிறது. எல்லா மொழி, எல்லா மத, எல்லா கலாச்சாரங்களை பின்பற்றும் மக்களுக்கான நாடுதான் இந்தியா என்பதை நாம் நிலைநிறுத்த வேண்டும் என ப.சிதம்பரம் பேசினார்.