
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வராக நாளை பதவியேற்கிறார். அவருடன் 33 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கிறது. அமைச்சர்களாக பதவியேற்பவர்களின் பட்டியல் வெளியாகிவிட்டது. மேலும் துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த பலருக்கு அமைச்சர்கள் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1984-இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் போக்குவரத்து துறை, 1991-இல் ஜெயலலிதா ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றிய முத்துசாமி, ஸ்டாலின் அமைச்சரவையில் வீட்டு வசதி துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல 1991-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, மின் துறை என முக்கியப் பொறுப்புகளை வகித்த ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சராகப் அறிவிக்கப்பட்டுள்ளார். 1991-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த எஸ்.ரகுபதி, சட்டத்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். 2001-இல் ஜெயலலிதா ஆட்சியில் வீட்டுவசதி துறை அமைச்சராகப் பணியாற்றி அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். 2011-இல் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, தற்போது மின்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் அமைச்சரே ஆகாத பி.கே.சேகர்பாபு, முதன் முறையாக ஸ்டாலின் அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.