மகேந்திரன் ஒரு துரோகி.. தான் ஒரு களை என்பதை ஒப்புக்கொண்டு அவரே ஒதுங்கிட்டார் - கமல்ஹாசன் கடும் காட்டம்

By karthikeyan VFirst Published May 6, 2021, 9:32 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து களையெடுக்கப்படும் முதல் துரோகி அவர் தான் என்பதை புரிந்துகொண்டு, நீக்கப்படுவதற்கு முன்பாகவே மகேந்திரன் விலகிக்கொண்டார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட கட்சி மக்கள் நீதி மய்யம். சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிய நிலையில், அக்கட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் வெறும் 2.84 சதவிகித வாக்குகளை பெற்றது மக்கள் நீதி மய்யம் கட்சி. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்தார். கமல்ஹாசனே வெற்றி பெறாதது அக்கட்சியினருக்கு ஏமாற்றமாக அமைந்தது.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தோல்விக்கான காரணம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், கட்சியில் சிலர் சரியாக தேர்தல் பணியாற்றாமல் கடமைக்கு கட்சியில் இருந்ததை தெரிந்துகொண்டதையடுத்து, அவர்கள் களையெடுக்கப்படுவார்கள் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், அப்படி கட்சி பணி சரியாக ஆற்றாத சிலர், தாங்கள் களையெடுக்கப்படலாம் என்பதையறிந்து, கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி அவர்களாகவே இன்று வெளியேறினர். கட்சியிலிருந்து தாங்கள் நீக்கப்படுவோம் என்றறிந்து முன்னதாகவே கட்சியிலிருந்து விலகினர் சில நிர்வாகிகள். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு, குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர் கட்சியிலிருந்து விலகினர். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறிய மகேந்திரன், இனியாவது கமல் திருந்த வேண்டும் என்று பேட்டியளித்தார்.

அவர்கள் விலகிய நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகேந்திரனை மிகக்கடுமையாக சாடியுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், களத்தில் எதிரிகளுடன் துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளை களையெடுங்கள் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களையெடுக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன்.

களை எடுப்போம் pic.twitter.com/8HqAoz0Udt

— Kamal Haasan (@ikamalhaasan)

கட்சியில் உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் தடுத்ததே மகேந்திரனின் சாதனை. திறமையும் நேர்மையும் இல்லாதவர்கள் வெளியேற மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். தனது திறமையின்மை, நேர்மையின்மை, தோல்வி ஆகியவற்றை, அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார் மகேந்திரன். தன்னை எப்படியும் நீக்கிவிடுவார்கள் என்பதை அறிந்துகொண்டு, புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களை என்று புரிந்துகொண்டு, தன்னைத்தானே நீக்கிக்கொண்டதை உங்களை போலவே நானும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். அவர் ஒரு துரோகி என்று கமல்ஹாசன் கடுமையாக விளாசியுள்ளார். 
 

click me!