கருணாநிதி பிறந்தநாள்... 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கும் மு.க.ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Jun 2, 2021, 9:27 PM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 
 

சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அரசு அமைந்த பிறகு, கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி தொடங்கும் என்று மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்றவுடன் கருணாநிதி பிறந்த நாளுக்கு முன்பாகவே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் உத்தரவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டார். இதனையடுத்து முதல் தவணையாக 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கோட்டையில் நாளை தொடங்கி வைக்கிறார். அங்கு 10 பேருக்கு நிவாரண நிதியை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் கோயில் பூசாரிகள்,பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் நாளையே தொடங்கி வைக்கப்படுகிறது.
மருத்துவர்கள், காவலர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியும் நாளை நடைபெற உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கும் திட்டம், நகரப் பேருந்துகளில் திருநங்கைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டங்களும் நாளை கோட்டையில் நடைபெறுகின்றன.  

click me!