அந்தப் பதவிக்கு அவரையா நியமிப்பது..? அநீதி, அவமானம்... கொந்தளிக்கும் திருமாவளவன்..!

By Asianet TamilFirst Published Jun 2, 2021, 8:46 PM IST
Highlights

மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டும் வந்த அருண் மிஸ்ராவைத் தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும். இது நாட்டுக்கே அவமானமாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நீதிபதி அருண் மிஷ்ரா நியமிக்கப்பட்டிருப்பது மனித உரிமைகள்மேல் அக்கறைகொண்ட அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழு உறுப்பினராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அவரைத் தலைவராக நியமித்துள்ளனர். ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறான அந்த நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
அருண் மிஸ்ரா நீதிபதியாக இருந்தபோது பல்வேறு சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்தவர். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்திலேயே அவர் மீதான புகார்களின் காரணமாக இரண்டு முறை அவரை உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்க அன்றைய மத்திய அரசு மறுத்தது. பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகே அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, ‘பிரதமர் மோடி ஒரு தீர்க்கதரிசி’என்று வெளிப்படையாகப் புகழ்ந்து சர்ச்சைக்கு ஆளானவர் மிஸ்ரா. அரசாங்கத்துக்கு சாதகமான தீர்ப்புகள் வரவேண்டிய வழக்குகள் எல்லாம் அவரது அமர்வுக்கு அனுப்பப்பட்டன. பாஜக அரசு எதிர்பார்த்தபடியே அவற்றில் அவர் தீர்ப்புகளை வழங்கினார்.


அன்றைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும், மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த சிவராஜ் சவுகானுக்கும் ஏராளமான பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது என்ற ஆதாரங்களைக் கொண்ட சகாரா வழக்கு விசாரணையின்போது அதற்கான ஆதாரங்களைக்கொண்ட டைரிகளை வருமான வரித்துறை கைப்பற்றியது. அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை அருண் மிஸ்ராதான் தள்ளுபடி செய்தார். அதன்மூலம் மோடியை அவர் காப்பாற்றினார். குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. அந்த வழக்கை மறு விசாரணை செய்யவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கையும் அருண் மிஸ்ராதான் தள்ளுபடி செய்தார். அதன்மூலம் அமித்ஷாவைக் காப்பாற்றினார்.
அதுபோலவே, நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கிலும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பை அருண் மிஸ்ரா வழங்கினார். அவர் வழங்கிய ஒரு தீர்ப்பின் மூலமாக அதானி குழுமத்துக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிராக இவர் தாமே முன்வந்து தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கருத்து சுதந்திரம் குறித்த மிகப்பெரிய சர்ச்சையை அப்போது எழுப்பியது. நீதிபதியாக இருந்த காலம் முழுவதும் பாஜக அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தும், மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டும் வந்த அருண் மிஸ்ராவைத் தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும். இது நாட்டுக்கே அவமானமாகும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கான சட்டம் இயற்றப்பட்டபோது அந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே இருக்க வேண்டும் என விதி உருவாக்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த பாஜக அரசு, ‘ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி’ என அதை மாற்றியது. அந்த சட்டத் திருத்தத்தின் காரணமாகவே ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 5 பேர் தகுதியுடையவர்களாக இருந்தும் முதன் முறையாக தலைமை நீதிபதி அல்லாத அருண் மிஸ்ரா அதன் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த ஆணையத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழு உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , ‘இந்த ஆணையத்தின் தலைவராக எஸ்சி, எஸ்டி அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதை பிரதமர் மோடியும் அங்கிருந்த மற்ற உறுப்பினர்களும் ஏற்கவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் மறுத்ததற்குப் பிறகு செய்யப்பட்டுள்ள இந்த நியமனம் ஜனநாயகத்துக்கு முரணானது. எனவே, அருண் மிஸ்ராவின் நியமனத்தை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

click me!