கருணாநிதி சிலை திறப்பு விழா…. யார் யாரெல்லாம் வர்ராங்க தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Dec 4, 2018, 7:03 AM IST
Highlights

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வருகின்றனர். பாஜகவுக்கு எதிராக அணி திரளும் வகையில் நடைபெறும் இந்த விழவில் வேறு யார் யார் எல்லாம் வருகிறார்கள் என பார்க்கலாம்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடாஇ மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

வரும் 10-ந் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

அன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், கூட்டம் முடிந்ததும், அனைத்து தலைவர்களையும் சந்தித்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறார். அதற்கான அழைப்பிதழ்கள் வேகமாக தயாராகி வருகின்றன.

டிசம்பர் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை  சிலை திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்திலும், கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி கூட்டம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் நடைபெறுகிறது.

16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு, கருணாநிதியின் சிலையை அண்ணா அறிவாலய வளாகத்தில் சோனியாகாந்தி திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, சரத்பவார், பரூக் அப்துல்லா, முலாயம்சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதேபோல், கேரள  முதலமைச்சர்  பினராயி விஜயன், நாராயணசாமி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி ஆகியோரும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து வைகோ, சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், காதர்மொய்தீன் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு நிகழ்ச்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூடியிருக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு அகன்ற திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் அனைத்து தலைவர்களும் அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் அந்த மேடையிலேயே தொடங்க இருக்கின்றனர். இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான தமிழகத்தில் இருந்து பா.ஜ.க.வுக்கு எதிரான தேர்தல் பிரசாரத்தை தொடங்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கு அச்சாரமாக கருணாநிதியின் சிலை திறப்பு விழா அமைய இருக்கிறது.

click me!