
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தைப் பொறுத்தவரை லாட்டரி சீட்டு மறைமுகமாக விற்கப்பட்டுதான் வருகிறது. அதை அரசே விற்றால் கோடி, கோடியாகப் பணம் கொட்டும். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களின் மேல் படிப்புக்கும், தரமான மருத்துவ உதவிக்கும் பயன்படுத்தலாம். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நான்கூட குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கவில்லை. அதுமட்டுமல்ல, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் இல்லை.
ஆனால், லாட்டரி சீட்டில் கிடைக்கும் வருமானம் மூலம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி, மருத்துவச் சேவை ஆகியவற்றை கிடைக்க நடவடிக்கை எடுக்கலாம். அரசே லாட்டரியை விற்பனை செய்யலாம் என யோசனை கூறியதை விமர்சனம் செய்வார்கள். விமர்சனம்தான் நல்ல விடிவுக்கு அடித்தளம்.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.