தேர்தல் நடந்த இரண்டு மாதங்களில் ஆட்சி சரியாக இருந்திருந்தால் இந்த அளவில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது என்று தமிழக அமைச்சர் ஆர்.காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இதற்கு முன்பு எந்த ஆட்சியிலும் நடைபெறாத வகையில் தற்போது எல்லா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை வைத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி பேதம் இல்லாமல் அனைவருடைய ஆலோசனைகளையும் ஏற்று செயல்பட்டு வருகிறார்.
ஆய்வு கூட்டத்தில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். ஒரு சில மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்றுகொள்ளவில்லை என்று தகவல்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் மக்கள் முறையான ஆவணங்களும், பதிவும் இல்லாமல் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற 15 நாட்களில் இந்திய அளவில் மு.க. ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கவும், அதிக உயிரிழப்பு ஏற்படவும் காரணம் தேர்தல் நேரத்தில் இரண்டு மாதம் அரசு கொரோனா பணியைக் கவனிக்காததுதான் காரணம். அந்த இரண்டு மாதம் ஆட்சி சரியாக இருந்திருந்தால் இந்த அளவில் பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. தற்போது முதல்வர் ஸ்டாலின் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாள் முதலே தனது பணியை தொடங்கி தற்போது வரை தீவிரமாக பணியாற்றி வருகிறார். திமுக எப்போதும் மக்கள் இயக்கம். இந்த கொரோனா சமயத்தில் எங்கு தவறு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவில் இருந்து மக்களை முதல்வர் நிச்சயம் காப்பாற்றுவார்” என்று தெரிவித்தார்.