மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் சீண்டல்... அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எம்.பி. ரவிக்குமார் பரபரப்பு கடிதம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 25, 2021, 7:20 PM IST
Highlights

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கையைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழக மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன். இந்த சம்பவத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கையைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தங்களது மேலான பரிசீலனைக்கு பின் வரும் கருத்துகளை முன்வைக்கிறேன் என எம்.பி.ரவிக்குமார் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், 1. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் National Institute of Public Co operation and Child Development (NIPCCD) என்ற அமைப்பு போக்சோ சட்டம் 2012 இன் படி பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும்கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை ஒரு கையேடாகத் தயாரித்து வழங்கியிருக்கிறது.  56 பக்கங்கள் கொண்ட அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பள்ளியில் பயிலும் சிறார்கள் பாலியல் ரீதியாக சீரழிக்கப்படாமல் இருப்பதற்குப் பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய 12 விதமான பதுகாப்பு நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.அவற்றுள் முக்கியமாக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய நியமன நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே ஒவ்வொரு பள்ளியிலும் சிறார்களைப் பாதுகாப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்களை நியமிக்கும் போது அவர்கள் அதற்கு முன் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்குப் பல்வேறு வழிமுறைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த வழிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் குற்றப் பின்னணி கொண்ட பலர் ஆசிரியர்களாக நியமிக்கப்படும் நிலை இருக்கிறது. எனவே, தனியார்: பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படும்போது போக்சோ சட்ட வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே தனிப்பட்ட முறையில் ஆசிரியரைப் பற்றிய கருத்துக்கள் கேட்டறியப்படவேண்டும்.

2.சிறார்கள் பாதுகாப்புக்கான குழுவை அமைப்பது தொடர்பாக எட்டு அம்சங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை NIPCCD அளித்திருக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; அவர்களின் முதன்மையான பணி மாணவர்கள் பாலியல் ரீதியாக சீரழிக்கப்படக்கூடாது என்பதை கண்காணிப்பதாக இருக்க வேண்டும். அந்தக்குழுவில் ஒரு உறுப்பினர் சிறார் உரிமைகள் தொடர்பான அனுபவம் கொண்ட ஒரு நபராக இருக்க வேண்டும். அவர் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களிலிருந்து ஒருவராக்க கூட இருக்கலாம். மாணவர் பிரதிநிதிகள் இருவர் அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். 

அது ஆண் பெண் இருபாலரும் படிக்கிற பள்ளியாக இருந்தால் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் அதில் பிரதிநிதியாக இடம்பெற வேண்டும். அந்த குழு அடிக்கடி கூடி பள்ளிச் சூழல் குறித்து விவாதிக்க வேண்டும். அந்தக் குழுவின் தலைவர் ஒரு பிரதிநிதியை நியமித்து காவல்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளோடு தொடர்பு கொள்ள வசதி செய்து தரவேண்டும். யாரேனும் ஒரு மாணவருக்குப் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் உடனடியாக அந்த குழுவுக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் ஆண்டுக்கு இருமுறையாவது இதற்கெனப் பிரத்தியேகமாக நடத்தப்படவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி எல்லோருக்கும் தெரியும் விதத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு குழு அமைக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என அந்த விதிகள் கூறுகின்றன.

3. 'ஆன்லைன்' பாதுகாப்பு குறித்தும் அதில் 5 வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பள்ளி தொடர்பான பணிகள் தவிர ஆசிரியர் வேறு எந்த விதத்திலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் எவ்விதமான தொடர்பும் அனுப்பக்கூடாது. மாணவர்களுக்கு ஆசிரியர் அனுப்பும் மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களின் படி ஒன்று அவர்களது. பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட வேண்டும் சமூக ஊடகங்களில் மாணவர்களோடு எவ்வித உறவையும் ஆசிரியர்கள் பேணக்கூடாது.

மாணவர்களின் சம்மதமின்றி அவர்களை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது. அவர்களுக்கு சங்கடம் நேரும் விதத்தில் எந்தவிதமான 'ரெக்கார்டிங்கும்' செய்யப்படக்கூடாது' என்று அவ்விதிகளில் சொல்லப்பட்டுள்ளது இந்த விதிகள் ஒழுங்காகக் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இம்மாதிரியான நிலை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஏற்பட்டிருக்காது.

பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்தது போன்ற பாலியல் முறைகேடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறக் கூடும். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒரு கால நிர்ணயம் செய்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் போக்சோ சட்ட விதிகள் சரியாக கடைபிடிக்க படுகின்றனவா என்பது பற்றிய அறிக்கையை கேட்டுப் பெறவேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். 

click me!