
கர்நாடக மாநிலம் குடகில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரெசார்ட் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு கர்நாடக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையிலான அணிகள் இணைப்புக்குப் பிறகு சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடியது. அதில், சசிகலா மற்றும் தினகரனை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலம் குடகில் தங்கியுள்ள ரெசார்ட்டிற்கு தமிழக போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் வசப்படுத்துவதற்காக முதல்வர் பழனிச்சாமி தமிழக போலீசாரை குடகிற்கு அனுப்பி வைத்தார்.
நேற்று தமிழக போலீசார், குடகில் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரெசார்ட்டிற்கு சென்ற நிலையில், கர்நாடக போலீசார் அந்த ரெசார்ட்டின் உரிமையாளரான பிரவீனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரெசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பது தொடர்பாக தங்களிடம் ஏன் தெரிவிக்கவில்லை எனவும் இதுதொடர்பாக மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் சந்திக்குப்பா காவல்நிலையம் சார்பில் ரெசார்ட் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக போலீசார் குடகு வந்தபிறகுதான் தமிழக எம்.எல்.ஏக்கள் குடகு ரெசார்ட்டில் தங்கியிருப்பது தங்களுக்கு தெரியும் என கர்நாடக போலீசார் விளக்கமளித்துள்ளனர். பன்னீர்செல்வமும் எடப்படியாரும் நேற்று காலை அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி நியமனம் ரத்து செய்தது, தினகரனின் ஆதரவாளர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களும், நேற்று தமிழக போலீசாரை அனுப்பியது இன்று கர்நாடக காவல்துறை மூலம் குடைச்சல் கொடுப்பது என தினகரனை திணறவைத்துள்ளது.