Ganapati temple Chamarajanagar: கனவில் வந்த கடவுள்.. பிள்ளையார் கோயில் கட்டிய முஸ்லீம்... ஏன் தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Apr 7, 2022, 12:16 PM IST
Highlights

Ganapati temple Chamarajanagar: பழ வகைகள் மற்றும் பூஜை சாமான்களை இந்து வியாபாரிகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தடை, கோயில்களில் முஸிலீம் வியாபாரம் செய்ய தடை, ஹலால் விவகாரம் என தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. முஸ்லீம் மக்களுக்கு எதிராக அம்மாநிலத்தில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் பகுதியில் முஸ்லீம் ஒருவர் பிள்ளையார் கோயில் கட்டி, அதற்கு அர்ச்சகர் ஒருவரை நியமனம் செய்து பூஜைகளை செய்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

முன்னதாக கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள கோயில்களில் முஸ்லீம்கள் கடைகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. பின் ஹலால் இறைச்சிகளை வாங்க கூடாது என இந்து அமைப்பினர் பிராசாரம் செய்தனர். மேலும் பழ வகைகள் மற்றும் பூஜை சாமான்களை இந்து வியாபாரிகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர். 

பிள்ளையார் கோயில்:

கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் பகுதியில் பி ரகுமான் வசித்து வருகிறார். இவர் அம்மாநிலத்தின் நீர்பாசனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் சுவர்ணாவதி அணைக்கட்டில் கேட்கீப்பர் பணியை மேற்கொண்டு வருகிறார்.  தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் ரகுமான் சிக்கஹாலே அணைக்கட்டு அருகில் தான் பிள்ளையார் கோயிலை கட்டி இருக்கிறார். இதனை அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கட்டிவிட்டார்.

பூஜை:

இதுமட்டும் இன்றி பிள்ளையார் கோயிலில் தினமும் பூஜைகளை நடத்த ஏதுவாக அர்ச்சகர் ஒருவரை நியமனம் செய்துள்ளார் ரகுமான். மேலும் அர்ச்சகருக்கு ரகுமான் ஒவ்வொரு மாதமும் ரூ. 4 ஆயிரத்தை சம்பளமாக வழங்கி வருகிறார். இந்த பிள்ளையார் கோயிலில் பழம், பூ, தேங்காய் வைத்து முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த கோயில் அருகாமையில் உள்ள கிராம மக்கள் வழிபாடு நடத்து வருகின்றனர். 

காரணம்:

நீர்பாசனத்துறையில் பணியாற்றி வரும் போது, அருகில் இருந்த கோயிலில் பிள்ளையார் சிலை காணாமல் போய்விட்டது. பின் பிள்ளையாருக்கு கோயில் கட்ட முடிவு செய்தேன். இதே விஷயத்தை பிள்ளையாரும் என் கனவில் வந்து கூறினார் என ரகுமான் தெரிவித்தார். கோயிலை ரகுமான் தனது ஓய்வூதிய பணத்தை கொண்டு கட்டி இருக்கிறார். 

ஒலிப்பெருக்கி சர்ச்சை:

இதுதவிர மசூதிகளில் தொழுகை அழைப்புக்காக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மராட்டியத்தில் தொடங்கிய இந்த பிரச்சினை தற்போது கர்நாடகா மாநிலத்திலும் ஓங்க தொடங்கி இருக்கிறது. தொடர் சர்ச்சைகளை அடுத்து கர்நாடக மாநிலத்தில் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் அதிகரித்து வருகிறது. இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் முஸ்லீம் ஒருவர் பிள்ளையார் கோயில் கட்டி, அங்கு தினந்தோரும் பூஜைகள் நடத்த அர்ச்சகர் ஒருவரையும் நியமனம் செய்து அசத்தி இருக்கிறார்.

click me!