முதல்வரை புகழ்ந்து தள்ளிய திமுக உறுப்பினர்.! எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்.! அதிர்ச்சியில் எம்.எல்.ஏக்கள்...

By Ajmal KhanFirst Published Apr 7, 2022, 11:36 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து பேசினார். இனி கேள்வி நேரத்தில் இது போன்று யாரையும் பெருமைபடுத்தி பேச வேண்டாம் என திமுக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சட்ட சபையில்- கேள்வி நேரம்

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நேற்று தொடங்கியது. இன்று உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையானது நடைபெறவுள்ளது. இந்த மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பெரியகருப்பன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். முன்னதாக சட்டபேரவை கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது சட்ட மன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்துக்கொண்டு வந்தனர். இந்தநிலையில் திமுக உறுப்பினர்கள் திமுக தலைவர் ஸ்டாலினையும், அதிமுக உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சை புகழ்ந்து பேசி வந்தனர்.

ஸ்டாலினை புகழந்து பேசிய எம்.எல்.ஏ

 அப்போது ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஒட்டப்பிடாரத்தில் குழந்தைகள் மையம் அமைப்பது தொடர்பான கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு அமைச்சர் கீதா ஜீவன், குழந்தைகள் மையம் தற்போது நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும், புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக பதில் அளித்தார். இதனை தொடர்ந்து துணை கேள்வி கேட்ட சண்முகையா வரலாறு போற்றும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் தோன்றிய கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உள்ளத்தில் குடியிருக்கும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் இருக்கும் திசை நோக்கி வணங்குவதாக தெரிவித்தார். தொடர்ந்து  இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர், தமிழக மக்களின் பாதுகாவலரும்,  தமிழ்மொழி பாதுகாவலரும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் உழைப்பு, உழைப்பு என்று பாராட்டு பெற்றவரும் அரசியலில் விடிவெள்ளி சட்டத்தின் போராளியும் கழகத் தலைவரும் தமிழுக்கு விடியலை தந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் என பேசிக்கொண்டு இருந்தார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டார்.


முதலமைச்சர் எச்சரிக்கை...!

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நான் ஏற்கனவே பலமுறை எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போதும், ஆளுங்கட்சி வரிசையில் இருக்கும் பொழுதும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். கேள்வி நேரத்தை கேள்வி கேட்க  மட்டும் பயன்படுத்த வேண்டும் புகழ்வதற்கோ, பெருமைப்படுத்தி பேசுவதற்கோ பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். மேலும்  குறிப்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தி வற்புறுத்தி கேட்டுக் கொள்வதாகவும் அப்போது கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய திமுக சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையாவை, சபாநாயகர் அப்பாவு கேள்வி மட்டும் கேளுங்கள் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய மற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சி தலைவர்களை புகழ்ந்து பேசுவதை நிறுத்தி விட்டு கேள்விகளை மட்டும் கேட்டனர்.
 

click me!