அமித்ஷா அவசர அழைப்பு..? டெல்லிக்கு புறப்பட்ட ஆளுநர் ரவி..!நீட் தேர்வுக்கு தீர்வு கிடைக்குமா..?

By Ajmal KhanFirst Published Apr 7, 2022, 10:40 AM IST
Highlights

நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், மத்திய அரசின் அழைப்பின் பேரில் தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் விலக்கு மசோதா

நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வும் அவ்வப்போது  நிகழ்ந்து தமிழக மக்களை வேதனை அடையவைத்துள்ளது. இந்தநிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பி இருந்தது. இந்த மசோதாவை தமிழக ஆளுநர் சுமார் 142 நாட்கள் கடந்த நிலையில் நிராகரித்து இருந்தார். இதனையடுத்து மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த மசோதா மீதும் தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்சனை எழுப்பி வருகிறது. 

தமிழக ஆளுநருக்கு அழைப்பு

 நீட் தொடர்பான மசோதாவை ஏற்கனவே தமிழக ஆளுநர் ஒரு முறை நிராகரித்து விட்டதால், மீண்டும் நிராகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடியரசு தலைவருக்கு நீட் விலக்கு மசோதவை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் தமிழக ஆளுநருக்கு  ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் மசோதா மீது முடிவெடுத்தற்கான கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படாத காரணத்தால் மசோதா மீது தமிழக ஆளுநர் தன் முடிவை இதுவரை எடுக்கவில்லையென்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் நீட் மசோதா தொடர்பாக தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரச்சனை எழுப்புவதால் தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று தான் தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளதாகவும், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்களை சந்தித்து நீட் மசோதா தொடர்பாக அடுத்த நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!