
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக எம்.கே.கணபதி பணியாற்றி வந்தார். சென்ற வருடம் ஜுலை 7-ஆம் தேதி குடகுவில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தனது தற்கொலைக்கு அமைச்சர் ஜார்ஜ், காவல்துறை அதிகாரிகள் பிரசாத், பிரணாப் உள்ளிட்டோர் தான் காரணம் என்று வீடியோவில் பதிவிட்டிருந்தார். இதை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
ஆனால், இந்த விசாரணையில் தனக்கு நம்பிக்கை இல்லை என உயிரிழந்த கணபதியின் தந்தை எம்.கே.குஷலப்பா வருத்தம் தெரிவித்ததுடன், இதில் சிபிஐ விசாரணை தேவை என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இதை அடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. பின்னர் இவ்வழக்கில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் முதல் குற்றவாளியாக பதிவு செயப்பட்டார். மேலும், பெங்களூரு லோக்ஆயுக்தா ஐ.ஜி. ப்ரணவ் மோஹாந்தி, கர்நாடக புலனாய்வுத்துறை ஏ.டி.ஜி.பி. ஏ.எம்.பிரசாத் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்தது சிபிஐ.
இந்நிலையில் அமைச்சர் ஜார்ஜ் உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால், மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினார்.
ஆனால் அதை நிராகரித்த முதல்வர் சித்தராமையா, இந்த வழக்கு சிபிஐ வசம் இருப்பதால் தனது அமைச்சர் பதவியில் இருந்து ஜார்ஜ் விலகத் தேவையில்லை எனக் கூறினார். தனது அமைச்சர் பதவியைக் கொண்டு எவ்வித ஆதாயமும் ஜார்ஜ் தேடப் போவதில்லை என்றார் அவர்.