
கர்நாடக முதல்வர் குமாரசாமி, நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் மஜத கட்சி தொண்டர்களை குமுற வைத்தது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத0 கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி செயல்பட்டு வருகிறார். குமாரசாமி முதல்வராக பதவியேற்ற பின், ரூ.34,000 கோடி மதிப்புள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார்.
பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்வீரர்கள் பிரிவின் சார்பில் முதல்வர் குமாரசாமி, மஜத அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மஜத கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவெ கௌடா, மஜத கட்சியின் மாநில தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி மற்றும அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, மங்களூருவில் போராட்டம் நடத்திய சில பெண்கள் தங்களுக்கான முதல்வர் குமாரசாமி அல்ல என கூறி கோஷமிட்டது எனது மனதை புண்படுத்திவிட்டதாக கூறிய குமாரசாமி, மக்கள் தன்னை ஆதரிக்கவில்லை எனக்கூறி கண்கலங்கினார்.
அழுகை அடைத்ததால் பேச முடியாமல் திணறிய குமாரசாமி, பின்னர் கண்களை துடைத்துக்கொண்டு, மன வேதனையுடன் பேசினார். அப்போது, நான் என்ன பாவம் செய்தேன்? பதவியேற்று 2 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆட்சி செய்வதற்கு கால அவகாசம் கொடுக்காமல் என்னை நிந்திப்பது ஏன்? விவசாய கடன்களை தள்ளுபடி செய்தும் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் பேசினார். மேலும் தனது கௌரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவானால், 2 மணி நேரத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் தெரிவித்தார். குமாரசாமியின் அழுகை, மஜத தொண்டர்களை கலங்கடித்தது.