எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம் இருக்கு.. குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த கர்நாடக முதல்வர்..!

By Kevin KaarkiFirst Published Apr 20, 2022, 11:01 AM IST
Highlights

பழைய ஹூப்ளி காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹூப்ளி வன்முறை சம்பவத்தில் அப்பாவி பொது மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை பதிலடி கொடுத்து இருக்கிறார். "தக்க வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தான் போலீசார் 89 பேரை கைது செய்துள்ளனர்.," என அவர் தெரிவித்தார். 

பழைய ஹூப்ளி காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்துக்கு காரணமான ஒருவரையும் விட மாட்டோம். தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் இந்த அரசு கடும் நடவடிக்கையை நிச்சயம் எடுக்கும் என முதல்வர் பசுவராஜ் பொம்மை தெரிவித்து இருக்கிறார்.

கடும் நடவடிக்கை:

"சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக் கொண்டு காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்தை தாக்குவது மன்னிக்கவே முடியாத குற்ற செயல் ஆகும். மக்கள் என்ன கூறுகிறார்களோ அது தான் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தது. எதிர்கட்சிகள் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது. அவர்களிடம் இருந்து இதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது," என அவர் மேலும் தெரிவித்தார். 

மறுப்பு:

இதுதவிர காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் முதல்வர் பசுவராஜ் பொம்மை மறுத்துள்ளார். தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் குற்றவாளிகளை புல்டோசர் மூலம் மிரட்டும் சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, கர்நாடகா அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என பதில் அளித்தார். 

தாக்குதல்:

கடந்த வாரம் முஸ்லீம் மக்களுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட் நபருக்கு எதிராக கர்நாடக மாநிலத்தின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஹூப்ளி பழைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சமூக வலைதள பதிவை போட்ட நபரை காவல் துறையினர் கைது செய்தனர். எனினும், காவல் துறை எடுத்த நடவடிக்கை திருப்தி இல்லை என கூறி புகார் அளித்தவர்கள் அன்று இரவே காவல் நிலையத்திற்கு வந்தனர். 

இரவு நேரத்தில் காவல் நிலையத்தின் வெளியே ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். பின் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு காவல் நிலையத்தை சுற்றி வளைத்துக் கொண்டு வெளியில் இருந்த படி காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காவல் நிலையம் மட்டுமின்றி இன்ஸ்பெக்டர் உள்பட பல காவலர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

கைது:

இந்த தாக்குதலில் ஈடுபட்ட 89 பேரை கர்நாடக போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தான் ஆளும் கட்சி அரசாங்கம், அப்பாவி பொது மக்களை கைது செய்து இருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். 

click me!