அதிமுக ஆட்சியின் போது மேகதாது அணை விவாதத்தை காவிரி ஆணையத்தில் அனுமதித்தது இல்லை. திமுக ஆட்சியின் போதுதான் காவிரி ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை திமுக அரசு காப்பாற்றவில்லை.
தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்கூட கர்நாடகாவால் வைக்க முடியாது. அவர்கள் நிதி ஒதுக்கினாலோ, ஆவேசமாக பேசினாலோ அச்சப்பட தேவையில்லை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய இபிஎஸ்: அதிமுக ஆட்சியின் போது மேகதாது அணை விவாதத்தை காவிரி ஆணையத்தில் அனுமதித்தது இல்லை. திமுக ஆட்சியின் போதுதான் காவிரி ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை திமுக அரசு காப்பாற்றவில்லை. தமிழக அரசு அலட்சியத்தின் காரணமாக 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அச்சம் எழுந்துள்ளது என இபிஎஸ் கூறினார்.
இதையும் படிங்க: சாதி வாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. சாதகமாகத்தான் செயல்படுகிறோம்- மு.க. ஸ்டாலின்
இதற்கு பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக்கூடாது என கூறினோம். நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுத்திருப்பதால் முடிவு எடுக்கக்கூடாது என குறிப்பிட்டோம். உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால் விவாதிக்கலாம் என கர்நாடக அரசு கூறியது. எங்களது எதிர்ப்பையும் மீறி காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது விவகாரத்தை எடுத்தது.
இதையும் படிங்க: அம்மஞ்சல்லி என்றால் என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு ஏன் இந்த வார்த்தையை இன்று சட்டப்பேரவையில் உபயோகித்தார்?
தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல்லைக்கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது. அவர்கள் நிதி ஒதுக்கினாலோ, ஆவேசமாக பேசினாலோ அச்சப்பட தேவையில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் திமுக அரசு அனுமதிக்காது. தமிழ்நாட்டில் பிறந்த யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மேகேதாட்டுவுக்கு அனுமதியை தர மாட்டார்கள். எனவே அஞ்சத் தேவையில்லை. ஆனால் இந்த விளக்கத்தில் திருப்தி அடையாத அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.