அரசியல் ஆலோசனைக்காக நடிகர் விஜய் என்னை இதுவரை அணுகவில்லை என தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், விஜய் உதவி கேட்டால் கட்டாயம் செய்வேன். என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அட்வைஸ் கொடுப்பேன் என கூறியுள்ளார்.
தமிழக அரசியலும் பிரசாந்த கிஷோரும்
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தது. இந்த கால கட்டத்தில் இழந்த ஆட்சியை மீட்க முடியாமல் திமுக தவித்தது. அப்போது திமுக தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசகராக இருந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டவர் பிரசாந்த் கிஷோர். இதனையடுத்து கடும் போட்டிக்கு மத்தியில் அதிமுகவிடம் இருந்து திமுக மீண்டும் ஆட்சியை பறித்தது. மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமில்லாமல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுள்ளார். இதனிடையே தமிழகதில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார்.
அரசியல் களத்தில் நடிகர் விஜய்
தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் பணி முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் கட்சி கொடி, சின்னம் ஆகியவற்றை வெளியிடவுள்ளார். மேலும் தனது இலக்கு சட்டமன்ற தேர்தல் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லையெனவும் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக 234 சட்டமன்ற தொகுதிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. மேலும் 100 மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட தலைவர் என நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு அரசியல் ஆலோசகரா.?
இதனையடுத்து தனது அரசியல் பயணத்திற்கு ஆலோசனை வழங்க பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரசாந்த் கிஷோர், அரசியல் ஆலோசனைக்காக நடிகர் விஜய் என்னை இதுவரை அணுகவில்லை என தெரிவித்தார். ஆனால் விஜய் உதவி கேட்டால் கட்டாயம் செய்வேன். என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அட்வைஸ் கொடுப்பேன் என கூறினார். ஆனால் நடிகர் விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக இருக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்