சாதி வாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. சாதகமாகத்தான் செயல்படுகிறோம்- மு.க. ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Feb 22, 2024, 1:42 PM IST

சாதி வாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என பாமகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேசுவதற்கு பாமக உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.
தொடர்பாக பேசிய பேரவை தலைவர் அப்பாவு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒன்றிய அரசுதான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதைத்தான் நமது முதலமைச்சர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். எந்தெந்த அமைச்சகத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் உடனடியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். உங்களின் கருத்தை தான் முதலமைச்சரும் அரசும் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.  நேற்று நீங்கள் இது குறித்து பேசும் போது முதலமைச்சர் உங்களின் கருத்தோடு ஒத்த கருத்தாக உள்ளார். இன்று தெரிவித்து பாமக உறுப்பினர்கள் இருக்கையில் அமர வேண்டும் என்று கூறினார். 

இதன் பிறகும் பாமக உறுப்பினர்கள் எழுந்து நின்று பேசுவதற்கு அனுமதி கேட்டனர். அப்போது பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஏற்கனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான பிரச்சனை இந்த அவையில் பேசப்பட்டுள்ளது. பேரவை தலைவர் குறிப்பிட்டது போல பட்ஜெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப் பேரவையிலும் பல நேரங்களில் பேசப்பட்டுள்ளது.  இதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,  தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் என்னை சந்தித்து இந்த பிரச்சனை குறித்து சொல்லி இருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு விளக்கமாக பதில் சொல்லி இருக்கிறேன். அதுதான் நடந்து கொண்டு உள்ளது. உங்களின் சாதி வாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். என்று பதில் அளித்தார்.

Latest Videos

 இதனை தொடர்ந்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற பா.ம.க தலைவர் ஜிகே மணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த  தமிழக அரசுக்கு மட்டும் அல்ல  ஊராட்சி மன்ற தலைவர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட அதிகாரம் உண்டு. அனைத்து சாதி அமைப்புகளும் இதை வலியுறுத்துகின்றனர். வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களை கண்டறிய சாதி வாரி கணக்கெடுப்பு முக்கியம். வன்னியர்களுக்கு 10.5 கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இந்த ஆட்சியில் 10.5 ககும்  ஆதரவாக நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றதை நாங்கள் மறுக்கவில்லை.. ஆனால் நடைமுறைப்படுத்த வில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு கிடைக்கவில்லையென தெரிவித்தார். 

click me!