
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. அதில், திமுக 24 வார்டுகளை கைப்பற்றியது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 7 வார்டுகளிலும், மதிமுக ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன. எதிர்க்கட்சிகளில் பாஜக 11 இடங்களையும், அதிமுக 7 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் பெற்றன. இந்நிலையில், மேயர் வேட்பாளராக வழக்கறிஞர் மகேஷ், துணை மேயர் வேட்பாளராக மேரி பிரின்சி லதா அறிவிக்கப்பட்டார். போட்டியில்லாமல் வெற்றி பெற்று விடலாம் என்று கருதிய நிலையில் அதிமுக ஆதரவுடன் பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளருமான மீனாதேவ் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை மறைமுக தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் மொத்தம் பதிவான 52 ஓட்டுகளில் திமுக வேட்பாளர் மகேஷ் 28 வாக்குகள் பெற்று மேயராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனாதேவ் 24 வாக்குகள் பெற்றார். அதேபோல், துணை மேயருக்கான தேர்தலில் மேரி பிரின்சி லதா 28 வாக்குகள் பெற்று வெற்றி வெற்றார். திமுக கூட்டணியில் 32 வாக்குகள் இருந்தன. அதில் 4 வாக்குகள் பாஜவுக்கு மேயர், துணை மேயர் தேர்தலில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரேஷ்ராஜன்அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.சுரேஷ்ராஜனை, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த ஆர்.மகேஷ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திமுக நிர்வாகிகள், அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.