திண்டுக்கல்லை யாராவது பாமகவுக்கு கொடுப்பாங்களா? அதிமுகவை கலாய்த்த ராஜ கண்ணப்பன்!

By Asianet TamilFirst Published Mar 22, 2019, 10:29 AM IST
Highlights

 திண்டுக்கல் தொகுதியை பாமகவுக்கு விட்டுக் கொடுத்ததை எந்த அதிமுககாரானாவது ஏற்றுக்கொள்வானா என திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவில் சிவகங்கை, ராமநாதபுரம் என இரு தொகுதிகளில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்தார். ஆனால், இரு தொகுதிகளுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. என்றாலும், வேறு ஏதாவது தொகுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், எந்தத் தொகுதியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்தார். 
இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியை பாமகவுக்கு அதிமுக கொடுத்திருப்பது பற்றி கண்ணப்பன் விமர்சனம் செய்திருக்கிறார். இதுபற்றி சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சென்ற தேர்தலில் அன்வர் ராஜாவுக்காக ராமநாதபுரம் தொகுதியில் 3.5 கோடி செலவு செய்தேன். ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால் இதை செய்தேன். அதிமுகவில் ஜனநாயகமே இல்லை. சசிகலா குடும்பத்திடம் கட்சியும் ஆட்சியும் போகக் கூடாது என பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். ஆனால், நேற்று கட்சிக்கு வந்த தன் மகனுக்கு தேனியில் சீட்டு தந்துள்ளார்.
எம்ஜிஆர் முதன்முதலாக நின்று வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை பாமகவுக்கு கொடுத்ததை எந்த அதிமுககாரனாவது ஏற்றுக்கொள்வானா? கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசிக்கக்கூடவில்லை. அதுவே என் அதிருப்திக்கு காரணம். நயினார் நாகேந்திரனுக்காக ராமநாதபுரத்தை ஒதுக்கியுள்ளனர். அவருக்கு அப்படி என்ன திறமை இருக்கிறது? சட்டசபை இடைத்தேர்தலில் 18 தொகுதியில் 13 கிடைத்தாலே திமுக ஆட்சியைப் பிடித்துவிடும்” என்று தெரிவித்தார்.

click me!