தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபியால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த வன்முறை அராஜகத்தை பல்கலைக்கழக பாதுகாவலர்களும், டெல்லி போலீசாரும் வாய்மூடிக்கொண்டு பார்வையாளர்களாக பார்த்ததாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்களை தாக்கிய ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்ற திமுக துணைத்தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அதில், புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏபிவிபி அராஜகம்
19 ஆம் தேதி ஜேஎன்யுவில் உள்ள மாணவர் சங்க அலுவலகத்தில் நூறு மலர்கள் குழு சார்பாக திரைப்படக் காட்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏபிவிபி அமைப்பினர் சீர்குலைத்தது பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிஎச்டி மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். மேலும் தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவப்படங்களையும் சேதப்படுத்தினர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாணவர்களை ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டப்போதும் ஏபிவிபியினர் தாக்கியதில், சில மாணவர்களுக்கு ரத்தம் கொட்டியது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் திரு.தமிழ் நாசருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பாதுகாப்பு வழங்கிடுக
ஏபிவிபியால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த வன்முறை அராஜகத்தை பல்கலைக்கழக பாதுகாவலர்களும், டெல்லி போலீசாரும் வாய்மூடி பார்வையாளர்களாக இருந்துள்ளனர். ஜேஎன்யுவில் ஜனநாயகக் குரல்களை நசுக்க ஏபிவிபி அமைப்பினர் வன்முறையில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஜேஎன்யு போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏபிவிபியால் இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் தமிழக மாணவர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துவதாக கனிமொழி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்..! அதிரடியாக களத்தில் இறங்கிய திமுக அரசு