நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத பிரதமர், தேர்தல் என்றவுடன் வாரத்திற்கு 5 முறை தமிழ்நாடு வந்துள்ளதாக கனிமொழி விமர்சித்தார்.
ஒரு முறை கூட வராத பிரதமர்
தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தியாகராயர் நகர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட காமராஜர் சாலையில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்த அவர், நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத பிரதமர், தேர்தல் என்றவுடன் வாரத்திற்கு 5 முறை தமிழ்நாடு வந்துள்ளார்.
பாஜக வாக்குறுதி என்ன ஆச்சு.?
300, 400 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையிலிருந்த குல கல்வி முறையை மீண்டும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பாஜக கொண்டுவர நினைக்கிறது. யாரெல்லாம் ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொன்னார்களோ, அவர்களெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த இட ஒதுக்கீடு மூலம் தற்பொழுது உயர் பதவியில் பொறுப்பு வைத்து வருகின்றனர். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக பாஜக கூறினார்கள், இரண்டு பேருக்கும் வேலை வாங்கி கொடுத்து உள்ளனரா என்றால் இல்லை. இந்திய மக்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக கூறினார், இதுவரை ஒரு ரூபாய் கூட வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை,
மணிப்பூர் தீ அணையவில்லை
பெண்களுக்குப் படிப்பு எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என்று காரணத்தினால் புதுமைப்பெண் என்ற திட்டத்தை, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் திட்டமாகப் புதுமைப்பெண் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண் பிள்ளைகளுக்கும் எனத் தமிழ் புதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.தனது அரசியல் காரணத்திற்காக பாஜக கொளுத்திய தீ இன்னும் மணிப்பூரில் எரிந்து கொண்டிருக்கிறது. இன்னும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாமல், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர் என கனிமொழி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்