அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையும் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது என்றும் முடிவு செய்தனர்.
அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும் என கனிமொழி கூறியுள்ளார்.
தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து முதலில் ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாகவும், உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க;- ஆளுநருக்கு காத்திருக்க வேண்டியதில்லை; தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை வெளியிடுகிறது?
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாலும் அவரால் அமைச்சர் பொறுப்பில் நீடிக்க முடியாது என்பதால் அவரது இலாக்காக்களை பிரித்து கொடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையும் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது என்றும் முடிவு செய்தனர்.
அதற்கான ஒப்புதல் பெறுவதற்கு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கைது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும், கைது குறித்தும் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறி பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். இரண்டாவது முறையாக ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். இன்னும் அதற்கான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி இலாக்காக்கள் மாற்றம்: பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு? - என்ன காரணம்?
இதுதொடர்பாக திமுக எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும் என கனிமொழி கூறியுள்ளார்.