சத்தியம் வென்றது.. தமிழகமே கொண்டாடவேண்டிய வெற்றி.. டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு கமல் ஹேப்பி!

By Asianet TamilFirst Published May 8, 2020, 8:30 PM IST
Highlights

“நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி. #வெல்லும்தமிழகம்” என்று கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, “எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி” என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. டாஸ்மாக கடைகள்  திறப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிப்பான கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகள் திறக்க சென்னை இயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 3000க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 
ஆனால், பல இடங்களில் சமூக விலகல் இல்லாமலும், முண்டியடித்துக்கொண்டும் மது வாங்க கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருந்து மதுபானங்களை வாங்கினர். மது வாங்கும் ஆர்வத்தில் பல இடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை. மிகவும் நெருக்கமாக நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.  இதுதொடர்பாக வெளியான புகைபடங்களை வைத்து, உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு, குடிமகன்கள் கூட்டமாக நின்றதற்கான புகைப்பட ஆதாரங்களுடன், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


இதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “டாஸ்மாக் கடைகளில் விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்பது உறுதியாகிறது. இதே நிலை நீடித்தால் கொரோனா மேலும் வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. எனவே ஊரடங்கு முடியும் வரை கடைகளைத் திறக்கக் கூடாது” என்று கூறி நாளை முதல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. 
இ ந் நிலையில் இந்தத் தீர்ப்பை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி. #வெல்லும்தமிழகம்” என்று கமல் தெரிவித்துள்ளார்.

click me!