மகாராஷ்டிராவை ஓரங்கட்டி மாஸ் காட்டும் தமிழ்நாடு.. கொரோனா தடுப்பில் நாம தான் பெஸ்ட்..! மார்தட்டும் அமைச்சர்

By karthikeyan VFirst Published May 8, 2020, 7:53 PM IST
Highlights

இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு பணிகளில் தமிழ்நாடு தான் சிறந்து விளங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், அவர்களில் 1899 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பில் டாப்பில் இருக்கும் மகாராஷ்டிராவை விட அதிகமான பரிசோதனைகளை செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

மகாராஷ்டிரா அளவுக்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலுமே பாதிப்பில்லை. மகாராஷ்டிராவின் மொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழ்நாட்டின் பாதிபு எண்ணிக்கை. ஆனாலும் தமிழ்நாட்டில் பரிசோதனைகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் 500க்கு அதிகமாகவுள்ளது. அதற்கு அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டதுதான் காரணம். அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டால்தான், அதிகமான பாசிட்டிவ் கேஸ்களை கண்டறிய முடியும். இதுதான் கொரோனா தடுப்பில் முக்கியமான பணி. அதை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தினமும் சராசரியாக 13 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 52 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் பரிசோதனைகள் அதிகமாக செய்யப்படுவதால், அதிகமான பாதிப்பு உறுதியாகிறது. கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 52 பரிசோதனை மையங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவிலேயே இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரம் பரிசோதனைகள் தான் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை 2,16,416 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே இதுதான் அதிகம். 

அதேபோல இறப்பு விகிதமும் தமிழ்நாட்டில் குறைவு. இதுவரை 6009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 40 பேர் மட்டுமே இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 0.6% என்ற அளவிலேயே உள்ளது. தமிழ்நாட்டில் பொதுச்சுகாதார கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாகவும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்ததாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  
 

click me!