
தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அப்துல் கலாமின் இல்லத்திற்கு சென்று அவரது மூத்த சகோதரரிடம் வாழ்த்து பெற்ற கமல், அதன்பிறகு மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவித்து கொடியை ஏற்றுகிறார்.
இதற்கிடையே பயணத்தின் ஒருபகுதியாக ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற கமல், மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய கமல், 45 வருடங்கள் கழித்து ராமநாதபுரத்திற்கு வருகிறேன். ஊர் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால் என் மக்கள் அப்படியேத்தான் இருக்கிறார்கள். என் சித்தப்பா வீடு இங்கு இருப்பதால் நமக்கும் ஒரு வீடு ராமநாதபுரத்தில் இருக்கிறது என நினைத்தேன். ஆனால், உங்களை பார்க்கும்போது இந்த ஊரே எனக்கு வீடுதான் என்பதை புரிந்துகொண்டேன்.
என்னை இதுவரை சினிமா நட்சத்திரமாக பார்த்துக்கொண்டிருந்தீர்கள். நான் சினிமா நட்சத்திரம் அல்ல. உங்கள் வீட்டு விளக்கு. என்னை பொத்தி பாதுகாக்க வேண்டியதும் ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு. இந்த அன்பு வெள்ளத்தில் நீந்தித்தான் வந்தேன். இந்த வெள்ளம் தொடர வேண்டும். நீங்கள் என்னை வாழ்த்த வேண்டும் என கமல் பேசினார்.