
தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அப்துல் கலாமின் இல்லத்திற்கு சென்று அவரது மூத்த சகோதரரிடம் வாழ்த்து பெற்ற கமல், அதன்பிறகு மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவித்து கொடியை ஏற்றுகிறார்.
கடவுள் மறுப்பாளராகவும் பகுத்தறிவுவாதியாகவும் கமல் தன்னை காட்டிக்கொண்டதால் அவ்வாறே அவர் மீதான பொதுவான மதிப்பீடும் இருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகளை போல தனிமனித தொழுகை, பொன்னாடை போற்றுதல், போஸ்டர் ஒட்டுதல் இவற்றை எல்லாம் முதலில் மாற்ற வேண்டும் என்பதும் கமலின் நோக்கமாக உள்ளது.
ஆனால் சாமியை மறுக்கும் கமலையே சாமி என வர்ணித்து திருச்சி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
”கர்ப்பகிரகம் விட்டு சாமி வெளியே வருகிறது”
”களம் காணுது சாமி, இனி நல்லா இருக்கும் இந்த பூமி”
என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை திருச்சி முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.
இதுபோன்ற செயல்கள் தொடருமேயானால், தனித்த அடையாளத்துடன் திகழ வேண்டும் என்ற நோக்கில் கமல் ஆரம்பிக்கும் கட்சியும் பத்தில் ஒன்றாக போய்விடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.