
கமல் போன்றவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் நியாயப்படி எல்லாம் நடக்கும்; மாற்றத்தை விரும்பும் அதிகாரிகள் பலர் இணைந்து, மக்கள் விரும்பும் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவோம் என்று அண்மையில் கமல் கட்சியில் இணைந்துள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மௌரியா கூறியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது பயணத்தைத் தொடங்கிய இடத்தில் இருந்து, தானும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது பெருமையா உள்ளது என்றும், பிரமிப்பூட்டும் எளிமையை அப்துல் கலாம் இல்லத்தில் கண்டதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்த கமல்ஹாசன், அவரிடம் ஆசி பெற்றார்.
மதுரை, ஒத்தக்கடை மைதானத்தில் கட்சி கொடி, கொள்கை குறித்து அறிவிப்பை இன்று வெளியிடுகிறார். இந்த நிலையில் நடிகர் கமலுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவி தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ராமேஸ்வரம் சென்று நடிகர் கமலுக்கு அவரது ரசிகர்கள் பலர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கமலின் புதிய கட்சியில் இணைந்து பணியாற்றுவதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான மௌரியா, கமல் கட்சியில் சேர்ந்துள்ளார். இவர், மயிலாப்பூரில் துணை கமிஷனராகவும், சிறை துறை ஐ.ஜி.யாகவும் பணியாற்றினார். மௌரியா, பணிக்காலம் முடியும் முன்பே விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் மௌரியாவிடம் பிரபல நாளிதழ் ஒன்று பேட்டி கண்டது. அப்போது பேசிய அவர், மக்கள் பிரச்சனைகளுக்காக டுவிட்டரில் அவர் தெரிவித்த துணிச்சலான கருத்துக்கள் அவர் மீதான ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியது. இன்று மக்கள் மத்தியில் மாற்றம் வேண்டும் என்கிற மனநிலை ஏற்பட்டுள்ளது. கமல் போன்றவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால், நியாயப்படி எல்லாம் நடக்கும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. அதுபோன்ற சூழல்தான் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும். அதே நேரத்தில் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டிய கட்டாயமும் இப்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாற்றம் ஒன்றே இதற்கு வழியை ஏற்படுத்தி தரும் என்று விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை கமல் ஏற்படுத்துவார் என்று தான் நம்புவதாக கூறினார்.
மாற்றத்தை விரும்பும் அதிகாரிகள் பலர் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் விரும்பும் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவோம் என்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மௌரியா கூறினார்.