
தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அவை அத்தனையிலும் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக போட்டியிடும் என்று அதன் தலைவர் கமல் தெளிவாக அறிவித்திருக்கிறார். நேற்று தேனாம்பேட்டையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமல் நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களைச் சந்தித்தபோது இதைத் தெரிவித்தார்.
‘இடைத்தேர்தலில் ஒதுங்கி இருந்துவிட்டு பொதுத்தேர்தல்வரை காத்திருக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தேர்தல் எவ்வளவு சீக்கிரம் வந்தாலும் அதை எதிர்கொள்ள முழுவீச்சுடன் நாங்கள் தயாராகவே உள்ளோம்’ என்ற கமல் அடுத்து ராஜபக்ஷே பதவி ஏற்பது கேட்கப்பட்டபோது மட்டும் வழக்கம்போல கொஞ்சம் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பினார்.
'இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சேவை நான் வரவேற்கவில்லை. இருந்தாலும் முன்பு போல அவர் செயல்படமாட்டார் என நம்புகிறேன். மற்ற நாட்டு அரசியல் விவகாரத்தில் நாம் குறுக்கீடு செய்ய கூடாது. இருந்தாலும் முன்பு செய்ததை தற்போதும் செய்வார்கள் என எண்ண வேண்டாம். தமிழர்களுக்கு நல்லது பண்ணமாட்டார் என நாம் நினைக்கவேண்டாம்’ என்றார் கமல்.
’அதாவது ராஜபக்ஷே நல்லவர் இல்லை. ஆனா அவர் நல்லவரா இருந்தா நல்லாருக்குமோன்னு தோணுது’ என்பது போல இதைப்புரிந்துகொண்டுவிட்டு கடந்துசென்றுவிடவேண்டியதுதான்.