கிராமங்களில் தங்க ‘பிக் பாஸ்’ அதிரடி திட்டம்... சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதே தயாராகும் கமல்!

By Asianet TamilFirst Published Aug 3, 2019, 7:39 AM IST
Highlights

கிராமங்களில் கட்சிக் கொடி ஏற்றுதல், கிராம மக்களுடன் கலந்துரையாடல், இரவில் கிராமத்தில்  தங்கி மக்களைக் கவருதல் எனப் பல்வேறு திட்டங்கள் அக்கட்சி சார்பாக வகுக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராமப்புறங்களில் மக்கள் ஆதரவை பெறும் நோக்கில் கிராமங்களில் தங்கி மக்களைச் சந்திக்க மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. தேர்தலில் 4 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது. சென்னை, கோவை, திருச்சி என நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்துக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், கிராமப் புறங்களை உள்ளடக்கிய தொகுதிகள் வாக்குகள் குறைவாகக் கிடைத்திருந்தன. எனவே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கிராமச் சபை கூட்டங்களில் கமல் பங்கேற்றார். பின்னர் கிராமச் சபை கூட்டங்களைத் திமுகவும் கையில் எடுத்து மக்கள் சந்திப்பை கூட்டங்களை நடத்தியது. இந்த முறை கிராமங்களுக்கு வெறுமனே கிராமங்களுக்கு சென்று கட்சி கொடி ஏற்றிவிட்டு செல்லாமல், கிராமங்களில் இரவு தங்கி, மக்களைச் சந்திக்க கமல் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கிராமங்களில் கட்சிக் கொடி ஏற்றுதல், கிராம மக்களுடன் கலந்துரையாடல், இரவில் கிராமத்தில்  தங்கி மக்களைக் கவருதல் எனப் பல்வேறு திட்டங்கள் அக்கட்சி சார்பாக வகுக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்த பிறகு இந்தப் பயணத் திட்டத்தை செயல்படுத்த கமல் முடிவு செய்திருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தீபாவளிக்கு பிறகு கிராமப் புறங்களில் கமலைப் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!