
அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கிய கமல், இன்று காலை அப்துல் கலாமின் இல்லத்திற்கு சென்று கலாமின் மூத்த சகோதரரிடம் வாழ்த்து பெற்றார்.
அதன்பிறகு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் பள்ளிக்குள் நுழைய கமலுக்கு தடை விதிக்கப்பட்டதால், பள்ளிக்கு வெளியே நின்று வணங்கிவிட்டு சென்றார்.
அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று கட்சியின் பெயரை அறிவிக்க உள்ள கமல், அதற்கு முன்னதாக மீனவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மீனவ அமைப்புகள், மீனவ பிரதிநிதிகள், மீனவ தொழிலாளர்கள், மீனவ பெண்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மீனவ பெண் ஒருவர், தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இருந்தும் யாரும் மீனவர்களை கண்டுகொள்ளவில்லை. மீனவர்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள். விவசாயிகள் பிரச்னை, காவிரி விவகாரம் ஆகியவற்றிற்கு குரல் கொடுப்பவர்கள், மீனவர்களின் வலியை புரிந்துகொள்வதேயில்லை. அந்த வகையில் இந்த மண்ணின் மைந்தன் என கூறி இங்கிருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் கமல், எங்களை சந்திக்கிறார். அந்த வகையில் மகிழ்ச்சியாக உள்ளது என வருத்தத்துடன் தெரிவித்தார்.