
தமிழக அரசியலில் புதிய கட்சி உதயமாக இருக்கிறது. கமல்ஹாசன் இன்று புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிறந்து விஞ்ஞானியாக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் அப்துல் கலாம். அதே மாவட்டத்தில் பரமக்குடியில் பிறந்தவர் கமல். எனவே அரசியல் பயணத்தை சொந்த ஊரிலிருந்து தொடங்க விரும்பிய கமல், அப்துல் கலாமின் வீட்டில் இருந்து தொடங்க விரும்பினார்.
அதனடிப்படையில், இன்று காலை அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்று அவரது அண்ணனிடம் ஆசிபெற்றார். காலை உணவை அங்கு முடித்தார். அப்துல் கலாம் படித்த பள்ளிக்குள் நுழைய கமலிற்கு தடை விதிக்கப்பட்டதால், பள்ளிக்கு வெளியே நின்று வணங்கிவிட்டு சென்றார். பின்னர் மீனவர்களை சந்திக்கிறார்.
அதன்பிறகு அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு சென்று கட்சியின் பெயரை அறிவிக்க இருக்கிறார். அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள கமல், அரசியலில் சாதிப்பாரா? சரிவாரா? என்பதை அவரது செயல்பாடுகள் தான் தீர்மானிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கோலோச்சினர். கருணாநிதி சினிமாவில் இருந்து வந்தாலும் அவர் சினிமாவால் மட்டுமே வந்தார் என்று கூற இயலாது. இ
இந்நிலையில், தற்போது ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் அரசியல் கட்சியின் பெயரை கமல் அறிவிக்க இருக்கிறார்.