
பத்மாவதி திரைப்படத்தை பார்க்காமல் மக்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு தடை கோருவது தவறானது என்று நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே இயக்கத்தில் பத்மாவதி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்ச ராணியான பத்மாவதியின் வரலாற்று திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ராஜபுத்திரர்களின் கர்னி சேனா அமைப்பினர் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டிசம்பர் 1-ந்தேதி ரிலீஸ் ஆகிய வேண்டிய படத்தின் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் பத்மாவதி படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் டைம்ஸ் இலக்கிய விழாவில் நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியாதாவது-
நமது மக்கள் மிகவும் உணர்ச்சிவசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பத்மாவதி திரைப்படத்தை பார்க்கும் முன்பே அதற்கு தடை கோருகிறார்கள். அது தவறானது.
உதாரணமாக, என்னுடைய திரைப்படமான விஸ்வரூபம் படத்தைக் கூட யாரும் பார்க்காமல் அதற்கு தடை கோரினார்கள். நான் கூட இன்னும் பத்மாவதி திரைப்படத்தை பார்க்கவில்லை. விஸ்வரூபம் படத்தை ஒருவர் கூட பார்க்காமல்தான் அப்போது அதை தடை செய்ய வேண்டும் என்றார்கள். இதை நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்ற முறையில் கூறாமல், இதை ஒரு இந்தியனாக கூறுகிறேன்.
பத்மாவதி திரைப்படத்துக்கு இப்போது வரும் எதிர்ப்புகள் போல், இதற்கு முன் பல படங்களுக்கும் எதிர்ப்பு இருந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள மக்கள் சுயநலமாக மாறி வருகிறார்கள், ஒவ்வொரு எதிர்மறையான கருத்தை கேட்கும்போதும் அதை நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது.
என்னுடைய ‘ஹே ராம்’ படத்தின்போது என்ன நடந்தது?. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள், படத்தின் பதாகைகளைப் பார்த்துவிட்டு, அதில் ஏதோ தவறு இருக்கிறது எனப் பேசினார்கள். நான் எப்படி படத்தை இயக்கி இருக்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியாது, ஆனால், படத்தை பார்க்காமல் படத்தை தடை செய்ய வேண்டும் என்றனர்.
நாம் எப்போதுமே எதிர்மறையான விஷயங்களை உடனடியாக நம்பிவிடுகிறோம். முதலில் பத்மாவதி திரைப்படம் வெளியாகட்டும். அதன்பின் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், நாம் புரிந்துகொள்வோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.